3 உலக சாதனைகள் படைத்த இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ்.. ஆனாலும் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி
விசாகப்பட்டினம்: இந்திய மகளிர் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிச்சா கோஷ், தனது வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை ஆடி, மூன்று உலக சாதனைகளை உடைத்துத் தள்ளினார். 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் அபாரமாக ஆடி 94 ரன்கள் குவித்து இருந்தார். ஆனால், அவரது இந்த போராட்டம் வீணானது. கடைசி வரை விறுவிறுப்பாகச் சென்ற போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, வெற்றி பெற்றது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது 102 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது, எட்டாவது வீராங்கனையாகக் களமிறங்கினார் 22 வயதான ரிச்சா கோஷ். இந்திய அணி 150 ரன்களைத் தாண்டினாலே பெரிய விஷயம் என்று நினைத்தபோது, அவர் மாபெரும் அதிசயத்தை நிகழ்த்தினார்.
77 பந்துகளைச் சந்தித்த அவர், 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைப் பறக்கவிட்டு, 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நூலிழையில் தனது முதல் சதத்தைத் தவறவிட்டாலும், அவர் பல சாதனைகளை படைத்தார்.

1. அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீராங்கனை:
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 1000-வது ரன்னைப் பதிவு செய்த ரிச்சா கோஷ், பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் (1010 பந்துகள்). உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
2. 8-வது வீரராக உலக சாதனை:
8-வது இடத்தில் களமிறங்கி 94 ரன்கள் குவித்ததன் மூலம், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், 8-வது அல்லது அதற்குக் கீழ் உள்ள வரிசையில் களமிறங்கி, அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் ரிச்சா கோஷ் படைத்தார்.
3. உலகக் கோப்பையில் சாதனை பார்ட்னர்ஷிப்:
சினே ராணாவுடன் (33 ரன்கள்) அவர் அமைத்த 88 ரன்கள் பார்ட்னர்ஷிப், மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் 8-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற புதிய சாதனையாகும்.
தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்தப் போட்டியில் இந்தியாவின் டாப்-ஆர்டர் மீண்டும் ஒருமுறை சரிவைச் சந்தித்தது. இந்திய அணி 83/1 என்ற நிலையிலிருந்து 102/6 எனச் சரிந்தது. ரிச்சா கோஷின் போராட்டத்தால், இந்திய அணி 50 ஓவர்களில் 251 ரன்கள் குவித்தது. 252 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
ஆனால், இந்த இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்காவும் ஒரு கட்டத்தில் 81 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் லாரா வோல்வார்ட் (70) மற்றும் க்ளோ ட்ரையான் (49) அணியை மீட்டனர். வோல்வார்ட் ஆட்டமிழந்த பிறகு, உள்ளே வந்த நடின் டி க்ளெர்க், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். வெறும் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் விளாசிய அவர், தென்னாப்பிரிக்காவை 48.5 ஓவர்களில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.


Click it and Unblock the Notifications