மும்பை: 2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. தற்போதைய ஃபார்ம், அணியின் பலம், இதுவரை நடந்த போட்டிகள் என அனைத்திலும் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருக்கும் நிலையில், இந்திய அணி எப்படி ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம் என்பது பற்றி மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், வர்ணனையாளருமான இயன் பிஷப் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கிரிக்கெட் உலகில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதும்போது எந்த அணியும் வெற்றி பெறும் அணியாகக் கருதப்படுவதில்லை. ஆஸ்திரேலியா 2025 மகளிர் உலகக் கோப்பையில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது மட்டுமல்லாமல், அந்த அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்யக்கூடியவர்களாகவும், பேட்ஸ்மேன்கள் பந்துவீசக்கூடியவர்களாகவும் இருப்பது அவர்களுக்கு அதிக பலத்தை கொடுக்கிறது.
மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 60 ஒருநாள் போட்டிகளில் 49-ல் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது. கடைசியாக மோதிய மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது.

இந்திய அணியின் உடை மாற்றும் அறையில் கேப்டனாகவோ அல்லது பயிற்சியாளராகவோ இருந்தால், வீராங்கனைகளை எப்படித் தயார்படுத்துவது? இந்தக் கேள்விக்கு இயன் பிஷப் அளித்த பதில் இதுதான்: "முதலாவதாக, ஆஸ்திரேலியா போன்ற ஒரு சிறந்த அணியுடன் விளையாடுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் நான் நம்புவது என்னவென்றால்... அவர்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் மிகவும் சிறந்த அணி. அவர்கள் ஒரு தடுக்க முடியாத சக்தி. இது ஒரு கிரிக்கெட் போட்டி என்பதை இந்திய வீராங்கனைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும்."
"இது ஒரு முக்கியமான போட்டிதான், ஆனால் இது வாழ்வா சாவா போராட்டம் அல்ல. அனைவரையும் அமைதியாகவும், நிதானமாகவும் வைத்திருக்கவே நான் இதைக் கூறுகிறேன். ஏனென்றால், ஒரு சாம்பியன் அணிக்கு எதிராகக் களமிறங்கும்போது இந்த மனநிலைதான் அவசியம்."
"கடந்த 11 போட்டிகளில் இந்தியா ஒரே ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தாலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான வெற்றி-தோல்வி கணக்கு 49-11 என ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக இருந்தாலும், இந்தியா வென்ற அந்த ஒரு தருணம், இந்த அரையிறுதிப் போட்டியாக இருக்கப் போகிறது என்று அணி நம்ப வேண்டும். அந்த நம்பிக்கைதான் முக்கியம்" என்று அழுத்தமாகக் கூறினார்.
காயமடைந்த பிரதிகா ராவலுக்குப் பதிலாகக் கடைசி நேரத்தில் களமிறங்கும் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கும் பிஷப் இதே போன்ற ஆலோசனையை வழங்கினார். "வித்தியாசத்தை ஏற்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, நான் முடிந்தவரை நிதானமாக இருந்து, இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என்ற மனநிலையுடன் ஷஃபாலி களமிறங்க வேண்டும்" என்றார்.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆழத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பந்துவீச்சுக் கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பிஷப் தனது வியூகத்தை விளக்கினார். "இந்தியா கூடுதல் பந்துவீச்சு பலத்துடன் களமிறங்குவதையே நான் விரும்புகிறேன். பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்."
"ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆழத்தைக் கருத்தில் கொண்டு, நான் கூடுதல் பந்துவீச்சாளரை அணியில் வைத்திருக்கவே விரும்புவேன். இது போன்ற பெரிய போட்டிகளில் பகுதிநேர பந்துவீச்சாளர்களை நான் விரும்புவதில்லை. டி.ஒய். பாட்டீல் மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருப்பதால், பந்துவீச்சில் ஒரு கூடுதல் பாதுகாப்பு எப்போதும் அவசியம்."
"நீங்கள் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால், ஆஸ்திரேலியா அவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேரைக் குறிவைத்துத் தாக்கி, கேப்டன் ஹர்மன்ப்ரீத்துக்கு அழுத்தம் கொடுப்பார்கள். அப்போது அவர் பகுதிநேர பந்துவீச்சாளர்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்று அவர் தனது ஆலோசனையை கூறினார்.