IND vs SA Final: 52 ஆண்டு கால உலக சாதனை முறியடிப்பு.. குரு சேவாக்கையே மிஞ்சிய ஷஃபாலி வர்மா!
நவி மும்பை: இந்தியாவின் இளம் புயல், 21 வயதே ஆன ஷஃபாலி வர்மா, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், 52 ஆண்டு கால உலகக்கோப்பை வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் இரண்டிலும்) இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர்/வீராங்கனை என்ற பிரம்மாண்டமான உலக சாதனையைப் படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இவர் நிகழ்த்திய இந்த அசாத்திய சாதனை மூலம், தனது பேட்டிங் பாணிக்காக ஒப்பிடப்படும் ஜாம்பவான் வீரர் வீரேந்தர் சேவாக்கின் 20 ஆண்டு கால சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

இறுதிப் போட்டியைத் தெறிக்கவிட்ட ஷஃபாலி:
நவி மும்பையில் மழையால் தாமதமாகத் தொடங்கிய இந்தியா - தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தார் ஷஃபாலி வர்மா. பெரிய போட்டியின் அழுத்தம் துளியும் இன்றி, தனது இயல்பான, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டார்.
ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்த இந்த ஜோடி, பெரிய ஸ்கோருக்கு வலுவான அடித்தளமிட்டது. வெறும் 78 பந்துகளில் 87 ரன்கள் குவித்து, சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும், இந்திய அணி 298 ரன்கள் குவிக்க அவரது ஆட்டமே முக்கியக் காரணமாக அமைந்தது.
குருவையே மிஞ்சிய சிஷ்யை:
ஷஃபாலியின் அதிரடியான, அச்சமற்ற பேட்டிங் பாணி எப்போதுமே இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக்குடன் ஒப்பிடப்படுவது வழக்கம். 2003ஆம் ஆண்டு ஆண்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேவாக், தனது 24 வயது மற்றும் 154 நாட்களில் அரைசதம் அடித்ததே, இதுவரை உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் ஓர் இந்தியர் அடித்த இளம் வயது அரைசதமாக இருந்தது.
தற்போது, தனது குருவையே மிஞ்சி, ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றிலும் இளம் வயதில் அரைசதம் அடித்தவர் என்ற மாபெரும் பெருமையை ஷஃபாலி வர்மா தனதாக்கியுள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் இளம் வயதில் அரைசதம் அடித்தவர்கள் (ஆண்கள் & பெண்கள்):
- ஷஃபாலி வர்மா (இந்தியா) - 21 வயது 278 நாட்கள் - 2025
- ஜெசிகா டஃபின் (ஆஸ்திரேலியா) - 23 வயது 235 நாட்கள் - 2013
- வீரேந்தர் சேவாக் (இந்தியா) - 24 வயது 154 நாட்கள் - 2003


Click it and Unblock the Notifications