மகளிர் உலககோப்பை- வங்கதேசத்தை புரட்டி எடுத்த இந்திய அணி.. 5000 ரன்களை கடந்த ஸ்மிருதி மந்தானா
ஹாமில்டன்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்துடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேத்வு செய்தது.
இதனையடுத்து தொடக்க வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானா, செஃபாலி வர்மா ஆகியோர் எதிர்கொண்டனர்.

நல்ல தொடக்கம்
ஃபார்மில் இல்லாமல் திணறிய செஃபாலி வர்மாவுக்கு இந்த போட்டி நல்ல திருப்புமுனையை தந்தது. 42 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்களை சேர்த்தார். அவருக்கு பக்க பலமான ஸ்மிருதி மந்தானா 30 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் 5 ஆயிரம் ரன்களை ஸ்மிருதி மந்தானா சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது.

அரைசதம்
இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் மித்தாலி ராஜ் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 4 பந்து இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் களத்துக்கு வந்த யாஷ்திகா பொறுமையாக விளையாடி அரைசதம் அடிக்க, அவருக்கு பூஜா நல்ல ஆதரவு கொடுத்து 30 ரன்களும், ஸ்நே ரானா 27 ரன்களும் சேர்த்தனர்.

வங்கதேசம் 35-5
இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசத்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வங்கதேச வீராங்கனைகள் ஆட்டமிழந்தனர். 35 ரன்கள் சேர்ப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அபார வெற்றி
இதன் பின்னர் சல்மா 30 ரன்களும், லதா 24 ரன்களும் சேர்க்க, வங்கதேச மகளிர் அணி 119 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.


Click it and Unblock the Notifications