மகளிர் டி20 உலக கோப்பை - இந்தியா vs பாகிஸ்தான் இன்று மோதல்.. முக்கிய இந்திய வீராங்கனை விலகல்
கேப் டவுன் : டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய மகளிர் அணியை பொறுத்தவரை கடந்த டி20 உலககோப்பையில் இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவுடன் மோதி, கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
உலகமே கொரோனாவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சில நாட்கள் முன்பு இந்த தொடர் நடைபெற்றது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் டி20 உலககோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முக்கிய தொடர்
இந்தியாவில் தற்போது மகளிர் கிரிக்கெட் பிரபலமாகி வருகிறது, இதன் காரணமாக பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை நடத்துகிறது. இதற்கான ஏலம் நாளை நடைபெறும் நிலையில் , இந்த டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. இதனால் ஏலத்திற்கு முன்பு வீராங்கனைகள் தங்களது திறமையை நிரூபிக்க பாடுபடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

பின்னடைவு
எனினும் ஏலத்தால் தங்களுடைய கவனம் சிதறாது என்று இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இன்றைய ஆட்டத்தில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

நட்சத்திர வீராங்கனைகள்
இதனால் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், தீப்தி சர்மா, அண்டர் 19 உலககோப்பையை வென்ற செஃபாலி வெர்மா , ரொட்ரிகியூஸ், ரிச்சா கோஷ் போன்ற பேட்டர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இதுவரை இரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் 13 முறை மோதியுள்ளனர்.

நேருக்கு நேர்
இதில் இந்திய அணி 10 முறையும், பாகிஸ்தான் அணி 3 முறையும் வென்று இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற 5 டி20 போட்டியில் கூட இந்திய அணி 4 முறையும், பாகிஸ்தான் அணி ஒரு முறையும் தான் வென்று இருக்கிறது. மகளிர் டி20 கோப்பை வரலாற்றிலும் இந்தியா 4 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்று உள்ளது. இம்முறையும் ஆதிக்கத்ததை செலுத்தி இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications