ICC மகளிர் உலககோப்பை.. 30 பந்துக்கு 36 ரன்கள் கைவசம் 6 விக்கெட் இருந்தும் இந்தியா தோல்வி.. இங்கிலாந்து அபாரம்
இந்தூர்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் இந்தியா தோற்று இருக்கிறது.
இந்தூரில் நடைபெற்ற 20 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஹீத்தர் லைட் அபாரமாக விளையாடி 91 பந்துகளில் 109 ரன்கள் அடித்தார்.

இதேபோன்று அமி ஜோன்ஸ் 56 ரன்கள் எடுக்க 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய பந்து வீச்சு தரப்பில் தீப்தி சர்மா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது.
தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 6 ரன்களிலும், ஹர்லின் தியோல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் ஸ்மிருதி மந்தானா மற்றும் ஹர்மன் பிரித் கவுர் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி இந்தியாவை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றது. ஸ்மிருதி மந்தானா 88 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழக்க, அப்போது அணி 234 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
ஒரு கட்டத்தில் 30 பந்துக்கு 36 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தன. இதனால் இந்தியாவின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் யாருமே நினைக்காத ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரித் 70 ரன்களிலும் தீப்தி சர்மா 50 ரன்களிலும், ரிச்சா கவுஸ் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
அம்ஜோத் கவுர் 18 ரன்களும், ஸ்னே ரனா 10 ரன்கள் எடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. கை அருகே இருந்த வெற்றியை இந்தியாவே இங்கிலாந்துக்கு பரிசளித்து விட்டதாக ரசிகர்கள் கடுமையாக சாடியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications