டெல்லி: 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து அதிகாரப்பூர்வமாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. மறுபுறம், இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து, 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. பின்னர், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, பாகிஸ்தான் அணிக்கு 20 ஓவர்களில் 234 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்து, 150 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி, ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால், கிடைத்த இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன்மூலம், வங்கதேசத்தைத் தொடர்ந்து, போட்டியிலிருந்து வெளியேறும் இரண்டாவது அணி என்ற சோகமான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த இமாலய வெற்றியின் மூலம், தென் ஆப்பிரிக்க அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தொடரின் துவக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வியைச் சந்தித்த அந்த அணி, அதன்பிறகு தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்து, அரையிறுதிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.
தற்போது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இந்தியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய மூன்று அணிகளில் ஒரு அணி நான்காவது இடத்தை பிடித்து அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
போட்டியை நடத்தும் இந்திய அணி, இதுவரை கலவையான ஆட்டத்தையே ஆடி உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய பலமான அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த இந்திய அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிப்பது சற்று ஆறுதலான விஷயம். இந்தியா இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது.
கொழும்பில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆட இருந்த இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. அந்தப் போட்டிகளில் நியூசிலாந்து வென்றிருந்தால், புள்ளிப் பட்டியலில் இந்தியா பின்தங்கியிருக்கும்.
இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது. அதற்கு, வரும் அக்டோபர் 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
ஒருவேளை, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், இந்திய அணியின் உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வராது. அப்போது, கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.