கவுஹாத்தி: ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கி வரும் நவம்பர் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. 13-வது மகளிர் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இம்முறை 8 அணிகள் பங்கேற்கிறது.மொத்தமாக 31 போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 26ஆம் தேதி நியூசிலாந்து, இங்கிலாந்து, அணிகள் ஒரு போட்டி மட்டும் இந்திய நேரப்படி 11 மணிக்கு தொடங்கும்.

குருப் பிரிவில் ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடும். இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவி மும்பை, கௌஹாத்தி, விசாகப்பட்டினம், இந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள கொழும்பு ஆகிய நகரங்களில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகள் அனைத்தையும் ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். இன்று நடைபெறும் முதல் போட்டியில் போட்டியில் நடத்தும் இந்தியா இலங்கை அணிகள் கௌஹாத்தியில் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராக இருக்கிறது. நடப்பாண்டில் மட்டும் 14 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடடி உள்ளது.
இந்திய ஆடவர் அணி இரண்டு முறை 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற நிலையில், கடந்த 47 ஆண்டுகளாக இந்திய மகளிர் அணி ஒரு முறை கூட உலக கோப்பையில் கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. சர்வதேச ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்திய அணி கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டி20 தொடரை வென்றது. இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வெற்றியும் பெற்று தொடர் தோல்விக்கு முடிவைக் கட்டிருக்கிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 413 ரன்கள் குவிக்க இந்திய அணி வெற்றி இலக்கு அருகே வரை வந்து தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய பலமாக ஸ்மிருதி மந்தானாவும், பிரதிகா ராவால் இருக்கிறார்கள். இந்த தொடக்க ஜோடி இந்தியாவுக்கு நல்ல அடித்தளத்தைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்மிருதி மந்தானா நடப்பாண்டில் மட்டும் நான்கு சதம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடித்து இருக்கின்றார். இதேபோன்று இந்தியாவின் கேப்டனும் நட்சத்திர வீராங்கனை ஹர்மான்பிரீத் கவுர், உலகக் கோப்பையில் விளையாடுகிறார்.
கடைசியாக இவரும் இங்கிலாந்துக்கு எதிராக சதமும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் அடித்து நல்ல பார்மில் இருக்கின்றார். இதேபோன்று இளம் வீராங்கனை ஜெமிமா பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 66 ரன்கள் குவித்து இருக்கின்றார். வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங் காயத்தில் இருந்து திரும்பி இருப்பதும் பலமாக பார்க்கப்படுகிறது.
தீப்தி ஷர்மா, ராதா யாதவ், சினே ராணா, ஸ்ரீ சரணி போன்ற சுழற் பந்துவீச்சாளர்களும் சொந்த மண்ணில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நம்பலாம். இந்தியாவிடம் இருக்கும் ஒரே குறையாக வேகப்பந்துவீச்சு பார்க்கப்படுகிறது. 22 வயதான கிராந்தி, அருந்ததி ரெட்டி போன்ற மொத்தமாகவே சேர்த்தால் 25 ஒரு நாள் போட்டிகள் தான் விளையாடி இருப்பார்கள்.
இந்த வேகப்பந்து வீச்சு ஜோடி அண்மையில் 300 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து வருவது குறையாக பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்திய அணி 2017 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியது. இதுவரை இந்திய மகளிர் அணி 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டிகளிலும், 1997 ஆம் ஆண்டு அரையிறுதிக்கும் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.