மகளிர் உலககோப்பை பைனல் டிஆர்பி ரேட்டிங்கில் மெகா சாதனை.. ஆடவர் டி20 உலககோப்பை பைனலை சமன் செய்தது
மும்பை: மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் அதிக அளவு பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டு புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. கிரிக்கெட் என்றாலே எப்போதும் ஆடவர் கிரிக்கெட்டை தான் ரசிகர்கள் பெரிய அளவில் பின்பற்றுவார்கள்.
ஆனால் தற்போது மகளிர் கிரிக்கெட் மீது கவனம் திரும்பி இருக்கிறது. உலக அளவில் மகளிருக்கு என தனியாக டி20 தொடர் நடத்தப்படும் நிலையில், இந்தியாவிலும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஹிட்டு அடித்தது. இந்த நிலையில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த போட்டியை பெரும் அளவிலான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இல் பார்த்து புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். அந்த வகையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை 185 மில்லியன் பார்வையாளர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்த்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
இது 2024 ஆடவர் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா கோப்பை வென்ற போட்டியை சமன் செய்திருக்கிறது. இது மகளிர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் தினமும் சராசரியாக பார்க்கும் பார்வையாளர்களை விட இது மிகவும் அதிகமாகும். அது மட்டுமல்லாமல் கடைசியாக நடைபெற்ற மூன்று மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை சேர்த்தாலும் இந்த தொடருக்கு கிடைத்த பார்வையாளர்கள் அளவை தொடவில்லை.
அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்த மகளிர் உலகக் கோப்பையை ஜியோ ஹாட்ஸ்டாரில் 446 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். இது மகளிர் கிரிக்கெட்டில் மிகப்பெரிய புரட்சியாகும். அதிகபட்சமாக இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்ற தருணத்தை 21 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள். இதேபோன்று தொலைக்காட்சியில் 92 மில்லியன் பேர் மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியை பார்த்திருக்கிறார்கள். இது 2024 டி20 உலக கோப்பை இறுதி போட்டி மற்றும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டிக்கான டி ஆர் பி ஐ சமன் செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமைச் செயல் அதிகாரி இசான் சாட்டர்ஜி,மகளிர் கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சியை இந்த எண்ணிக்கை காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் புது விதமான ரசிகர்களை மகளிர் கிரிக்கெட் பெற்று இருப்பதாகவும், இது ஐசிசி மற்றும் பி சி சி ஐ யின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications