மும்பை: ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு பிறகு உலக கோப்பையை வென்ற நான்காவது அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் கோப்பையை வென்ற பிறகு இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரித் பேசியதை தற்போது பார்க்கலாம்.

முதலில் நான் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்கவே முடியாதது. எங்களுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் நீங்கள் துணை நின்றீர்கள். என்னுடைய தந்தைக்கு முதலில் என்ற நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் தேர்வுக் குழுவினர், பயிற்சியாளர்கள், எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உலகக் கோப்பை தொடரில் மூன்று தோல்வியை தழுவிய பிறகும் எங்கள் நம்பிக்கை கொஞ்சம் கூட குறையவில்லை. அரை இறுதிக்குப் பின்னும் கூட நாங்கள் அதைப் பற்றி பேசினோம். எங்கள் அணியில் எந்த நிலையிலும் மாற்றத்தை வெற்றியை நோக்கி மாற்றக்கூடிய வீராங்கனைகள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை கூறுகிறேன். இந்த தொடர் முழுவதும் அவர்கள் நல்ல மனநிலையில் குறிக்கோளுடன் கடுமையாக உழைத்தார்கள்.
இரவு, பகல் பார்க்காமல் நாங்கள் உழைத்தோம். சாம்பியனாக இங்கு நிற்பதற்கு அனைத்து தகுதியும் என் அணிக்கு இருக்கின்றது. தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் பேட்டிங் செய்யும்போது அவர்கள் நன்றாக விளையாடினார்கள். அப்போது செபாலியை நான் பார்த்தேன். அவர் நன்றாக பேட்டிங் செய்திருந்ததால், என்னுடைய இதயம் அவருக்கு ஒரு ஓவர் வழங்கு என்று கூறியது. உடனே அவரிடம் உன்னால் ஒரு ஓவர் வீச முடியுமா என்று கேட்டேன்.
அதற்கு உடனே முடியும் என்றார். அவர் எப்போதுமே பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பார். அந்த ஒரு ஓவர் ஆட்டத்தையே மாற்றி விட்டது. அவர் எங்கள் அணியில் இணைந்தவுடன் அவரிடம் உங்களால் ஒன்று அல்லது இரண்டு ஓவர் வீச வேண்டும். அதற்கு தயாராக இருங்கள் என்று கூறி இருந்தோம். அதற்கு அவர் என்னிடம் பந்தை மட்டும் கொடுங்கள். நான் அணிக்காக பத்து ஓவர்கள் வீசுகிறேன் என்று கூறினார்.
அந்த அளவுக்கு நம்பிக்கையுடன் இருந்தார். பயமின்றி நேர்மறையான எண்ணங்களுடன் அனிக்காக எப்போதும் பொறுப்பேற்கும் நபராக இருக்கின்றார். இன்று ஆடுகளமும் வித்தியாசமாக இருந்தது. மழை மற்றும் மேகமூட்டங்கள் காரணமாக ஆடுகளம் கொஞ்சம் சவாலாக மாறியது. எனவே 29 ரன்கள் எடுத்தாலே இது சவாலான இலக்காகத்தான் இறுதி போட்டியில் அமையும் என்று எனக்கு தெரியும். இறுதி போட்டி எப்போதுமே கடும் அழுத்தத்தை கொடுக்கும்.
தென்னாப்பிரிக்கா வீராங்கனைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த உலகக் கோப்பை எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. இந்த இறுதி கட்டத்தை தாண்ட வேண்டும் என்று நாங்கள் ஒரு அணியாக உழைத்து வருகின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் பயிற்சி நாங்கள் கடுமையாக உழைத்து வருகின்றோம். அவர் எப்போதுமே எங்கள் அணியை பார்த்து உங்களால் மிகச் சிறந்த விஷயங்களை செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார்.
நாங்கள் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஒரு அணியாக நாங்கள் ஒருங்கிணைந்து உலக கோப்பையை வெல்ல முடியும் என்று நம்பினோம். இது உண்மையிலே ஒரு தொடக்கம் தான். இந்த தடையை நாங்கள் உடைத்து விட்டோம். இனி எங்களுடைய குறிக்கோள், இந்த வெற்றியை தொடர்ந்து பெற வேண்டும் என்பதுதான். சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு உலக கோப்பை என வரிசையாக பெரிய தொடர்கள் வருகிறது. அதில் அனைத்தையும் நாங்கள் வெற்றி பெறுவோம். இது எங்கள் அணிக்கு முடிவல்ல ஒரு புதிய தொடக்கம் என்று ஹர்மன்பிரித் தெரிவித்துள்ளார்.