12 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, உலக கோப்பையில் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து!
கிறைஸ்ட்சர்ஸ்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கின.
முதல் ஆட்டம் நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இலங்கை-நியூசிலாந்து நாடுகளிடையே தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஒவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணிக்கு 332 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து அணியின் சார்பில் ஆண்டர்சன் 75,மெக்கல்லம் 65, வில்லியம்சன் 57 ரன்கள் எடுத்தனர்.

சிறப்பான தொடக்கம்
இதையடுத்து இலங்கை துரத்தலை தொடர்ந்தது. திரிமனே, தில்ஷன் இருவருமே சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் ஸ்கோர் 13 ஓவரில் 67 ரன்களாக இருந்தபோது வெட்டோரி பந்து வீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து 24 ரன்களில் தில்ஷன் அவுட் ஆனார்.

சங்ககாரா அவுட்
இதைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் சங்ககாரா களமிறங்கினார். இதனிடையே 65 ரன்களில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் திரிமனே போல்ட் ஆனார். சிறப்பாக ஆடிய சங்ககாரா 38 பந்துகளில் 39 ரன்களில் பவுல்ட் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

முதல் முட்டை ஜெயவர்த்தனேவுக்கு..
இந்த உலக கோப்பையுடன் ஓய்வு பெறப்போகும் ஜெயவர்த்தனே 4 பந்துகளை சந்தித்து, வெட்டோரி பந்தில் ரோன்சியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். நடப்பு உலக கோப்பையின் முதல் டக் அவுட் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையும் ஜெயவர்த்தனேக்கு கிடைத்தது.

இலங்கை தடுமாற்றம்
இதனிடையே கருனரத்னே 14 ரன்களிலும், ஜீவன் மென்டிஸ் 4 ரன்களிலும் அவுட் ஆன நிலையில், இலங்கை 32 ஓவர்களில் 168 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போதே இலங்கையின் தோல்வியும் உறுதி செய்யப்பட்டது.

நியூசிலாந்து வெற்றி
இருப்பினும் கேப்டன் மேத்யூஸ் போராட்டத்தால் இலங்கை ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடியது. இருப்பினும், குலசேகரா 10 ரன்களிலும், ஹீரத் 13 ரன்களிலும், மலிங்கா முதல் பாலில் டக்அவுட்டிலும் வெளியேற, மேத்யூசும் 46 ரன்களில் நடையை கட்டினார். 46.1 ஓவர்களில் இலங்கை அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லக்மல் 7 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன்மூலம், 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

12 வருடங்களுக்கு பிறகு..
2003 உலக கோப்பை போட்டித் தொடரில் இருந்து இதுவரை ஐந்து முறை இவ்விரு அணிகளும் உலக கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 5 போட்டிகளிலுமே இலங்கைதான் வெற்றி பெற்றுள்ளது. 2003ல் ஒரு முறையும், 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளில் தலா இருமுறையும் நியூசிலாந்தை இலங்கை வீழ்த்தியுள்ளது. 12 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஒரு ஆட்டத்தில், நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications