உலக கோப்பை கிரிக்கெட்டும், இந்திய அணியும்! ரசிகர்களுக்காக ஒரு முழு ரவுண்ட்-அப்!
சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எத்தனை அணிகள் ஆடினாலும், நமது கவனம் எல்லாம் இந்தியா விளையாடும் போட்டிகளின் மீதுதானே இருக்கப்போகிறது. அப்படி இந்தியா பங்கேற்கும் போட்டிகள் குறித்தும், ஏற்கனவே நமது வீரர்கள் புரிந்த சாகசங்கள் குறித்தும் ஒரு சிறு குறிப்பு நம்மிடம் இருந்தால் நண்பர்களோடு டிவிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொன்றாக அவிழ்த்து விடலாம் அல்லவா..
அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பலன் கொடுக்கும். ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14ம்தேதி முதல் மார்ச் 29ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா பி- பிரிவில் இடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தானுடன் முதல் போட்டி
பரம எதிரி பாகிஸ்தானுடன் இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியை சந்திக்க உள்ளது. பிப்ரவரி 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

தென் ஆப்பிரிக்கா
பிப்ரவரி 22ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, தென் ஆப்பிரிக்காவுடனும், பிப்ரவரி 28ம் தேதி சனிக்கிழமை, ஐக்கிய அரபு அமீரகத்துடனும் மல்லுக்கட்ட உள்ளது இந்தியா.

மேற்கிந்திய தீவுகள்
மார்ச் 6ம்தேதி, வெள்ளிக்கிழமை மேற்கிந்திய தீவுகளுடனும், மார்ச் 10ம்தேதி, செவ்வாய்க்கிழமை ஐயர்லாந்துடனும், மார்ச் 14ம்தேதி, சனிக்கிழமை ஜிம்பாப்வேயுடனும் இந்திய அணி மோதும். இந்த லீக் சுற்றில் தகுதி பெற்றால் நாக்-அவுட் ரவுண்டுக்கு இந்தியா முன்னேறும்.

மூத்தவர் 'தல'தான்
இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர், கேப்டன் டோணிதான். டோணியின் வயது 33. இளம் வயது வீரர் என்றால் அது 20 வயதான அக்சர் பட்டேல் ஆகும்.

அனுபவசாலியும் அவரே..
இந்திய அணியில் உள்ள வீரர்களில் அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர் டோணி. அவர் 250 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறைந்த போட்டிகளில் விளையாடியவர் ஸ்டூவர்ட் பின்னியாகும். அவர் ஆறே போட்டிகளில்தான் ஆடியுள்ளார்.

உலக கோப்பை
இந்திய அணியில் ஏற்கனவே உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் பெற்ற ஆட்டக்காரர்கள், டோணி, கோஹ்லி, ரெய்னா மற்றும் அஸ்வின். இவர்களில் டோணி 2007 மற்றும் 2011 ஆகிய இரு உலக கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். மற்ற மூவரும் கடந்த 2011 உலக கோப்பையில் மட்டும் விளையாடியவர்கள்.

சச்சின் டெண்டுல்கர்
உலக கோப்பை தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமை, 45 போட்டிகளில் ஆடிய சச்சின் டெண்டுல்கருக்கு உள்ளது. உலக அளவிலும் இது சாதனையாகும்.

ஹாட்ரிக் கேப்டன் அசார்
இந்திய அணியின் கேப்டனாக உலக கோப்பையில், 23 மேட்சுகளில் அணியை வழிநடத்திய பெருமைக்கு சொந்தக்காரர் முகமது அசாரூதீன். அவர் 1992 முதல் 1999 உலக கோப்பை வரை மூன்று உலக கோப்பை தொடர்களில் 23 போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக இருந்துள்ளார்.

பலே கும்ப்ளே
விக்கெட் கீப்பராக இல்லாத இந்திய வீரர் ஒருவர் அதிக கேட்சுகளை பிடித்துள்ளார் என்றால் அந்த சாதனை அனில் கும்ப்ளேக்கு உரியது. 18 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 14 கேட்சுகளை பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர்களில் கிரண் மோரே 18 பேட்ஸ்மேன்களை அவுட் செய்து முதலிடத்திலுள்ளார். அதில் 12 கேட்ச், 6 ஸ்டெம்பிங் அடங்கும்.

விக்கெட்டுகளை அள்ளிய ஜாகீர்
உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் ஜாகீர்கானும், ஜவகல் ஸ்ரீநாத்தும் ஆகும். இருவரும் தலா 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஜாகீர்கான் 23 போட்டிகளிலும், ஸ்ரீநாத் 33 போட்டிகளிலும் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ஒரே போட்டியில் ஆறு விக்கெட்
உலக கோப்பை போட்டியொன்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் ஆஷிஷ் நெக்ராவாகும். 2003ல் இங்கிலாந்துக்கு எதிராக 23 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நெக்ரா இந்தியாவுக்கு வெற்றியை பறித்து தந்தார்.

சச்சின்-கங்குலி வாவ்..
உலக கோப்பை தொடர்களில் மொத்தம், 2,278 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். ஒரே மேட்சில் அதிக ரன் எடுத்த பெருமை சவுரவ் கங்குலியை சாரும். 1999 உலக கோப்பையில், இலங்கைக்கு எதிராக 183 ரன்களை அவர் குவித்தார்.

100ல் முதலிடம் சச்சின், 0ல் ஸ்ரீகாந்த்
உலக கோப்பை தொடர்களில் அதிக செஞ்சுரி அடித்தவர் சச்சின் டெண்டுல்கர். ஆறு சதங்களுடன் உலக அளவிலும் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் அதிகம் டக் அவுட் ஆன எதிர்மறை பெருமைக்குறியவர் தமிழகத்தை சேர்ந்தவரான ஸ்ரீகாந்த். நான்கு முறை வாத்தடித்துள்ளார்.

ஒரே தொடரில் இத்தனை ரன்களா..
உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையும் சச்சின் டெண்டுல்கரையே சாரும். 2003 உலக கோப்பை தொடரின்போது மொத்தம் 673 ரன்களை சச்சின் குவித்தார். உலக அளவிலும் இது சாதனையாகும். அந்த தொடரில் இந்தியா இறுதி போட்டிவரை வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸி.யிடம் பதுங்கி.. பெர்முடாவிடம் பாய்ந்து..
உலக கோப்பை போட்டியொன்றில் இந்திய அணி சேர்த்த அதிகப்படியான ரன்கள் 413 ஆகும். 2007ல் சிறிய அணியான பெர்முடாவுக்கு எதிராக இந்த ரன்களை இந்தியா குவித்தது. இந்தியாவின் குறைந்த ஸ்கோர் 125 ரன்களாகும். 2003 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவ்வளவு குறைந்த ரன்னில் படுக்கையை சுருட்டியது இந்தியா.

இந்தியாவின் உலக கோப்பை பங்களிப்பு
1975ல் லீக் சுற்று, 1979ல் லீக் சுற்று, 1983ல் உலக சாம்பியன், 1987ல் அரையிறுதி, 1992ல் லீக் சுற்று, 1996ல் அரை இறுதி, 1999ல் சூப்பர் சிக்ஸ் சுற்று, 2003ல் இரண்டாவது இடம், 2007ல் லீக் சுற்று, 2011ல் உலக சாம்பியன். இவையே இந்தியாவின் உலக கோப்பை பங்களிப்பாகும்.


Click it and Unblock the Notifications