இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி.. தொடர் புறக்கணிப்பால் கோபம்.. ஓய்வை அறிவித்தார் அம்பதி ராயுடு!
Recommended Video
லண்டன்: இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளார்.
இந்திய அணிக்குள் தொடர்ந்து நிறைய சிக்கல்கள், சர்ச்சைகள் நடந்து வருகிறது. இந்திய அணியில் 4வது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவது என்பதுதான் தற்போது பிரச்சனையாக இருக்கிறது. இதுதான் இந்திய அணிக்குள் நிறைய சிக்கல்கள், சர்ச்சைகளை தினமும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த இடத்தில் ஆடுவதற்கு இந்திய அணிக்குள் நிறைய பேருக்கு இடையில் போட்டி இருந்தது.ஆந்திராவை சேர்ந்த வீரர் அம்பதி ராயுடுவும் இந்த இடத்தில் ஆட தீவிர முயற்சி எடுத்தார்.

என்ன போட்டி
இந்திய அணியில் நான்காவது வீரராக கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் உள்ளிட்ட பலர் வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இவர்களை வைத்து இந்திய அணி பலமுறை சோதனை செய்தது. ஆனால் ஒருமுறை கூட இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவில்லை.

யார் தேர்வு
இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்த இடத்தில் ஆட தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். அப்போதே அம்பதி ராயுடு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதேபோல் விஜய் சங்கரை 3டி வீரர் என்று அம்பதி ராயுடு கிண்டல் செய்து இருந்த நிகழ்வும் நடந்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

காயம்
இதையடுத்து காயம் காரணமாக விஜய் சங்கர் இந்திய அணியில் இருந்து விலகினார். அப்போதும் கூட இந்திய அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆடும் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் மாற்று வீரராக இளம் வீரர் மயங்க் அகர்வால் கொண்டுவரப்பட்டார். இதுவும் அம்பதி ராயுடுவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. அவர் இருப்பதை கூட இந்திய அணி தேர்வு வாரியம் கண்டுகொள்ளவில்லை .

எததனை போட்டி
மொத்தமாக அம்பதி ராயுடு 55 ஒருநாள், 6 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் மூன்று சதங்களை அடித்துள்ளார். இந்திய அணிக்காக இவர் ஒருபோதும் டெஸ்ட் போட்டியில் விளையாடியதே இல்லை.

கோபம்
இதையடுத்து தற்போது அம்பதி ராயுடு தொடர் புறக்கணிப்பால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் இவர் ஓய்வு பெறுகிறார். முக்கியமாக ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுகிறார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரின் ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications