என்ன இது? எப்படி முடிகிறது? கோலியும் ஷமியும் இப்படி செய்திருக்க கூடாது.. ரசிகர்கள் கடும் பாய்ச்சல்!
லண்டன்: இந்திய கிரிக்கெட் ரசிகர்களே இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஷமி மற்றும் கோலிக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதுவரை நடந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத அணி என்றால் அது இந்திய அணிதான் நியூசிலாந்து 2 தோல்விகளையும், ஆஸ்திரேலியா ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

வெற்றி
கடைசியாக நடந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிரடியாக வென்றது. அதில் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்தது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர். ஆனால் இந்த போட்டியில்தான் இரண்டு இந்திய வீரர்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள்.

என்ன ஆனது
பொதுவாக மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஷெல்டன் காட்றல் விக்கெட் எடுக்கும் போது வித்தியாசமாக கொண்டாடுவார். ராணுவத்தில் நடப்பது போல நடந்து வந்து அவர் சல்யூட் வைப்பார். இவரின் இந்த கொண்டாட்டம் உலகம் முழுக்க வைரலானது. தான் ஜமைக்கன் ராணுவத்தில் வேலை பார்த்ததை கொண்டாடும் விதமாக ஷெல்டன் அப்படி செய்து வருகிறார்.

ஆனால் என்ன
கடந்த போட்டியிலும் இந்திய அணி வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்துவிட்டு ஷெல்டன் இப்படித்தான் செய்தார். இந்த நிலையில் ஷெல்டன் அவுட்டான போது இந்திய வீரர் ஷமியும் இதேபோல சல்யூட் அடித்தார். அவரை கிண்டல் செய்யும் விதமாக ஷமி இப்படி செய்தார். அதேபோல் கோலியும் போட்டிக்கு இடையிலும், போட்டியில் வெற்றிபெற்ற பின்பும் இதேபோல் சல்யூட் அடித்தார்.

இதற்குத்தான் கண்டனம்
இதற்கு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். என்ன இது, ஏன் கோலியும், ஷமியும் இப்படி நடந்து கொள்கிறார்கள். இது தவறு. அவர் அவரின் ராணுவத்தை மதிக்கிறார். நாம் அதை கிண்டல் செய்ய கூடாது. அது ராணுவத்தை கிண்டல் செய்வதற்கு சமம். கோலியும், ஷமியும் இப்படி நடந்திருக்க கூடாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications