அவர் பட்டினியில் விளையாட வந்திருக்கிறார்.. கவனமாக இருங்கள்.. அதிர வைத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலிங்!
Recommended Video
லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான வீரராக ஜோஃப்ரா ஆர்ச்சர் மாறியுள்ளார். நேற்று இங்கிலாந்து அணிக்காக இவர் விளையாடியது பலரது கவனத்தை ஈர்த்தது.
ஜோஃப்ரா ஆர்ச்சர்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இவரை யாருக்குமே தெரியாது.. அமைதியான எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த இவர் தற்போது கிரிக்கெட் உலகின் குட்டி சூறாவளி! இவர் வாழ்க்கையே ஒரு ரோலர் கோஸ்டர் போல பல திருப்பங்களை கொண்டு இருக்கிறது.
2018 ஐபிஎல் போட்டிதான் இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஒரே வருடத்தில் தற்போது இவர் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கி இருக்கிறார்.

அதிக காசு
இந்த ஐபிஎல் தொடருக்காக இவர் மிகவும் கடைசி நேரத்தில்தான் தேர்வானார். இவரை ராஜஸ்தான் அணி 7.2 கோடி கொடுத்து எடுத்தது. என்ன, யார் இந்த வீரர் இவருக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுத்து அணியில் எடுத்து இருக்கிறார்கள் என்று எல்லோரும் கேள்வி கேட்டு வந்தார்கள். பலருக்கு இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது கூட தெரியாது. ஏனென்றால் ஆர்ச்சரின் வாழ்க்கையில் அவ்வளவு குழப்பங்கள்.

இங்கிலாந்து இல்லை
இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிடையாது. இவர் மேற்கிந்திய தீவுகள் அணியில்தான் விளையாட வேண்டும் என்று இருந்தார். அந்த தீவில் குடியுரிமை கொண்ட இவர், உள்ளூர் அணிகளில் விளையாடி வந்தார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஏன் இல்லை
ஏற்கனவே பல குழப்பம் நிலவும் கேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் எல்லா முக்கிய வீரர்களையும் எப்படி புறக்கணித்து, தனக்கு தானே மண்ணள்ளி போட்டுக்கொண்டதோ அதே போல், ஆர்ச்சருக்கும் வாய்ப்பளிக்காமல் பிரச்சனை செய்து வந்தது. அதனால் இவரும் அங்கு புறக்கணிக்கப்பட்டார்.

இங்கிலாந்து சென்றார்
அப்போது ஆர்ச்சர் மிக உச்சக்கட்ட பார்மில் இருந்தார். ஆனால் அவருக்கு மேற்கிந்திய தீவுகளின் அண்டர் 19 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் அப்போது அண்டர் 19 கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் சிறப்பாக விளையாடினாலும் பல முக்கிய கண்கள் ஆர்ச்சரர் எங்கே இருக்கிறார் என்றுதான் தேடியது. வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஆர்ச்சரர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றார்.

என்ன கோபம்
என் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் எனக்கென்ன வேலை என்று உடனே இங்கிலாந்து சென்று விளையாட முடிவெடுத்தார். அதன்பின் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார். ஆனாலும் இங்கிலாந்து விதிப்படி அவர் 7 வருடம் உள்ளூர் அணிகளில் விளையாட வேண்டும். இதனால் உள்ளூர் போட்டியில் விளையாடின வந்தவருக்கு ஐபிஎல் மூலம் அடித்தது லக். ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் டி-20 லீக்கிலும் விளையாடி வந்தவர் கவனம் ஈர்த்தார்

2018ல் என்ன நடந்தது
2018 ஐபிஎல் போட்டியில் அவருக்கு கடைசியில்தான் வாய்ப்பு வந்தது. அதிலும் கூட ராஜஸ்தான் அணி அதிக காசு கொடுத்து எடுத்து இருந்தாலும் தொடக்கத்தில் அவரை வெறுமனே உட்கார வைத்துதான் இருந்தனர். அவரை பெரிய அளவில் எந்த ஒரு அணியும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு அவரின் பலம் தெரிந்து இருந்தது.

எப்படி வாய்ப்பு
மும்பைக்கு எதிராகத்தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதை அவர் அப்படியே சரியாக பயன்படுத்திக் கொண்டார்,. 4 ஓவர் போட்டு மொத்தம் 3 விக்கெட் எடுத்தார் இந்த பிளாக் பந்தர். இதில் பாண்டியா சகோதரர்கள், மிட்சல் விக்கெட் அடக்கம். அதே போல் 2019லும் ஐபிஎல் முழுக்க அவரின் ஆதிக்கம் தொடர்ந்தது. சென்ற தொடர் முழுக்க அவர் மிகச்சிறப்பாக விளையாடினார்.

கில்லியாக
இந்த தொடர் எல்லாவற்றிலும் கில்லி போல விளையாடும் வீரர் இவர்தான்.ஒரு கால்பந்து வீரரின் உடல்வாகில் இருக்கும் இந்த 23 வயதுக்காரர் 26 வயது வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாட காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இவரின் ஐபிஎல் போட்டிகளை பார்த்த அணி நிர்வாகம் 3 வருடத்திற்கு முன்பே அவரை அணியில் எடுத்தது. அதோடு உலகக் கோப்பை கிரிக்கெட் அணியிலும் எடுத்துள்ளது.

செம
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், இந்த ஐபிஎல் தொடரிலும் ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் டி-20 தொடரிலும் வரும் பணத்தை வைத்துதான் குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனாலும் இதுவும் கூட அவர்களின் வறுமைக்கும், கடனுக்கும் போதவில்லை என்றுள்ளார். இந்த ஐபிஎல்லில் இன்னும் அதிக விக்கெட் எடுத்து, எல்லோருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடியதன் விளைவு தற்போது உலகக் கோப்பையில் விளையாடுகிறார்.

நேற்று என்ன
நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இவர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.டு பிளசிஸ் , ஏய்டன் மார்கன், டெர் டுசென் ஆகியோர்களின் விக்கெட்டுகளை எடுத்தார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிக வலுவான வீரராக இவர் பார்க்கப்படுகிறார். இவர் மிகவும் பசியோடு விளையாட வந்துள்ளார்.. வேட்டையில் சிக்காமல் இருப்பது பேட்ஸ்மேன்களின் சாமர்த்தியம்!


Click it and Unblock the Notifications