எதுவும் நடக்கலாம்.. தயாராக இருங்கள்.. இந்திய அணியில் இதையெல்லாம் பார்த்ததே இல்லையே.. சூப்பர்!
லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இந்திய அணி அனைத்து விதமான சூழ்நிலைகளுக்கும் தயாராகி வருகிறது.
ஒரு காலத்தில் இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் பவுலர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து கடைசி நேரத்தில் 50-60 ரன்களை எடுப்பதில் வல்லவர்களாக இருந்தனர். முக்கியமாக ஷாகிர் கான், ஹர்பஜன் சிங், கும்ப்ளே உள்ளிட்ட வீரர்கள் கடைசி நேரத்தில் நன்றாகவே பேட்டிங் செய்து இருக்கிறார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் இந்திய அணியில் பவுலர்கள் அப்படி பேட்டிங் செய்வது கிடையாது. அஸ்வின் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட பின், பவுலர்கள் யாரும் இந்திய அணியில் பேட்டிங் சரியாக செய்வதில்லை.

என்ன இப்போது
முக்கியமாக இப்போது இருக்கும் இந்திய அணியில் பவுலர்களில் புவனேஷ்வர் குமார் மட்டும் சரியாக பேட்டிங் செய்கிறார். ஆனால் குல்தீப், சாஹல், பும்ரா என்று யாருமே சரியாக பேட்டிங் செய்வதில்லை. 10 ரன்களை கூட இவர்களால் கடைசி நேரத்தில் எடுக்க முடியவில்லை. இதுதான் தற்போது இந்திய அணிக்கு சிக்கலாகி இருக்கிறது.

என்ன சிக்கல்
இதனால் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பும் போது கடைசி நேரத்தில் உதவ ஆள் இல்லாமல் இந்திய அணி மோசமாக திணறி வருகிறது. அதிலும் டெத் ஓவர்களில் இந்திய அணி சரியாக ரன் எடுப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. இந்த நிலை இனியும் நீடிக்க கூடாது என்று இந்திய அணி முடிவெடுத்துள்ளது.

என்ன மாற்றம்
இதனால் நேற்று பயிற்சி முறையில் இந்திய அணி நிறைய மாற்றங்களை செய்துள்ளது. ஆம் எப்போதும் பவுலிங் பயிற்சி செய்யும் இந்திய பவுலர்கள் நேற்று அதிக நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர். முக்கியமாக மோசமாக பேட்டிங் செய்யும் குல்தீப், சாஹல் ஆகியோரும் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர்.

நல்லது
சாஹல் நீண்ட நேரம் யார்க்கர் பந்துகளில் நேற்று பேட்டிங் பயிற்சி செய்தார். கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம், அணி வீரர்கள் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதால் வீரர்கள் இப்படி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார்கள். இன்றைய போட்டியில் குல்தீப், சாஹல் இருவரும் பேட்டிங் எப்படி செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications