உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் இந்திய அணியும் பலப் பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஷாட்ரான் முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்தனர். இதில் இப்ராஹிம் சாட்ரன் 22 ரன்களிலும் அதிரடி வீரர் 21 ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மத் ஷா 16 ரன்களில் வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணி 63 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி மற்றும் அஹ்மத்துல்லா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் அஸ்மதுல்லா 62 ரன்களிலும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 80 ரன்களிலும் வெளியேறினர்.இதனால் ஆப்கானிஸ்தான் அணி 300 ரன்ளை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் மீண்டும் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் முகமது நபி 19 ரன்களும், நஜிபுல்லா 2 ரன்களிலும் வெளியேற ரசீத் கான் மட்டும் அதிரடியாக விளையாட முற்பட்டு 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளையும் சர்துல் தாக்குர் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.