ஐதராபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டம் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் மெயின் சுற்று வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் பலத்த பாதுகாப்புடன் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் வீரர்களின் உணவு மருத்துவ வசதிக்கு என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இது மிகப்பெரிய தொடர் என்பதால் வீரர்கள் தங்களது உடற்பயிற்சியை மேற்கொள்வதற்காக ஜிம் வசதி, நீச்சல் குளம் வசதி, யோகா செய்வதற்கான வசதி என அனைத்து வசதிகளும் வீரர்களுக்கு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஹோட்டலுக்குள் அடைந்து கிடைக்காமல் வெளியே சுற்றிவர சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. வெறும் அணி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை ஹோட்டலுக்கு வெளியே புல்வெளியில் நடத்துவது, பெரிய திரையில் படத்தைக் காட்டுவது என பல வசதிகளும் அணியினருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து அணியினருக்கும் மாட்டு இறைச்சி சமைத்து தரப்படாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. மாட்டு இறைச்சி மத சம்பந்தப்பட்ட உணர்வு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மாட்டு இறைச்சிக்கு பதில் ஆட்டு இறைச்சி, மற்றும் கோழிக்கறி, மீன் வகைகள் மற்றும் காய்கறிகள் அனைத்து வகைகளும் அணியினருக்கு செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரதச்சத்துக்கு வெளிநாட்டு வீரர்கள் மாட்டு இறைச்சியை நம்பி இருப்பார்கள். ஆனால் இந்தியாவின் இந்த முடிவு அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் ஆட்டு இறைச்சி ,கோழி போன்ற உணவு வகைகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பாஸ்மதி அரிசி சாப்பாடு மற்றும் ஹைதராபாத் பிரியாணி வகைகள் உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
மேலும் அந்தந்த ஊர்களில் வழங்கப்படும் சாப்பாட்டு வகைகளை 10 அணியினருமே சுவைத்துப் பார்க்கலாம். எனினும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களுக்கு இந்த சாப்பாடு தான் வேண்டும் என பட்டியல் வழங்கினால் அதனை சமையல் கலைஞர்கள் செய்து கொடுத்து விடுவார்களாம். இதில் வெளிநாட்டு உணவு வகைகளும் அடங்கும். ஆனால் மாட்டு இறைச்சி மட்டும் செய்து தரப்படமாட்டாது.