ஐசிசி உலக கோப்பை 2023 - கோலி பிறந்தநாளில் இந்தியா விளையாடும் போட்டி.. கடும் சவால் இருக்கு பாருங்க
கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கோலியின் பிறந்த நாளான நவம்பர் 5ஆம் தேதி இந்தியா ஒரு முக்கிய ஆட்டத்தில் விளையாடுகிறது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை நடந்த போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் மட்டும்தான் வீழ்ந்தது. இந்த நிலையில் அதே தென்னாப்பிரிக்கா அணியை இந்தியா நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

இது விராட் கோலியின் பிறந்த நாளன்று நடைபெறும் போட்டியாகும். கொல்கத்தா ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. பிறந்தநாள் அன்று விளையாடும் விராட் கோலி இந்தியாவுக்காக சதம் அடிப்பாரா? இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று தருவாரா என்று பலரும் இப்போதே கேள்வி கேட்டு வருகிறார்கள்.
உலகின் பாரம்பரியமிக்க மைதானங்களில் ஈடன் கார்டன் மைதானமும் ஒன்று. இங்கு முன்பு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தன. தற்போது மைதானம் புனரமைக்கப்பட்டதால் அது தற்போது 60,000 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும் 60 ஆயிரம் ரசிகர்கள் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அதில் அவர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தால் நிச்சயம் அது தூளாக தான் இருக்கும்.

இதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியாவுக்காக ஒரே தொடரில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மாவும் சாதனை படைத்தார். தற்போது ரோகித் சர்மா இந்த தொடரில் அது போன்ற ஒரு சாதனையை புரிந்தால் உலக கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் புரிந்திருந்தார்.
இதேபோன்று உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டமும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் மும்பை வான்கடே மைதானத்திலும் தான் நடைபெறுகிறது. இது இரண்டுமே இந்தியாவுக்கு சாதகமான மைதானம் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications