ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 344 ரன்கள் குவித்து இருக்கிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா டக் அவுட் ஆகி வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் மண்டிஸ் நிஷாங்கா அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன்களை சேர்த்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிஷாங்கா 51 ரன்களில் வெளியேறினார்.இதனை அடுத்து 3வது விக்கெட்டுக்கு குசல் மெண்டீஸ் மற்றும் சதிரா விக்ரமா ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் அசத்திய குசல் மெண்டிஸ் இன்றைய போட்டியிலும் தனது வழக்கமான அதிரடியை காட்டினார்.
பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த அவர் 65 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். தொடர்ந்து குசல் மெண்டிஸ் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக 77 பந்துகளில் அவர் 122 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடங்கும். இதனை அடுத்து களமிறங்கிய அசலங்கா ஒரு ரன்னிலும், தனஞ்செய்ய செல்வா 25 ரன்களிலும் கேப்டன் ஷனக்கா 12 ரன்களிலும் வெளியேற சமர விக்ரமா 89 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்தார். இது அவருடைய முதல் சதமாகும்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 370 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடு வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்து இருக்கிறது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஹசன் அலி நான்கு விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவுப் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள். பாகிஸ்தான் 300 ரன்களுக்கு மேல் இதுவரை ஒரே ஒரு முறைதான் வெற்றிகரமாக சேசிங் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.