சென்னை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 16வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் சென்னையில் பலப்பரிட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது. சிஎஸ்கே வீரர் கான்வே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

எனினும் கான்வே இன்றைய ஆட்டத்தில் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 20 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 34 ரன்களும் டாரில் மிச்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடிய வில் யங் 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
நியூசிலாந்து அணி 109 ரன்களில் தங்களுடைய இரண்டாவது விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்த 9 பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 110 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்போதுதான் ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் டாம் லாத்தம் கிளன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய டாம் லாத்தம் 68 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 72 ரன்களும் எடுக்க இறுதியில் மார்க் ஷாப்மண் 12 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. இதில் நியூசிலாந்து அணி இன்னும் விரைவாகவே ஆப்கானிஸ்தான் சுருட்டி இருக்கலாம். ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பில்டிங்கில் கடுமையாக சொப்பினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி ஒரு நல்ல இலக்கை எட்டிவிட்டது. இந்த நிலையில் இந்த இலக்கை ஆப்கானிஸ்தான் துரத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.