உலகக்கோப்பைத் தொடக்க விழா.. அகமதாபாத்தில் கூடும் 10 கேப்டன்கள்.. எந்த பிரபலத்தின் நடனம் தெரியுமா?
அகமதாபாத்: ஐசிசி உலகக்கோப்பைத் தொடரின் தொடக்க விழா அக்.4ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முக்கியமான அக்.14ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் அகமதாபாத் மைதானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதேபோல் நவ.4ஆம் தேதி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் போட்டியும், நவ.10ல் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் போட்டியும், நவ.19ல் இறுதிப் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது.
அந்த வகையில் மீண்டும் அகமதாபாத் மைதானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் உலகக்கோப்பைத் தொடருக்கான தொடக்க விழாவும் அகமதாபாத் மைதானத்தில் அக்.4ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்க உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தொடக்க விழாவினை "கேப்டன்ஸ் டே" என்றும் அழைக்க பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் தொடக்க விழாவில் பாலிவுட் பிரபலங்களான ஜான்வி கபூர் மற்றும் சமந்தாவை நடனமாட வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங், நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா ஆகியோர் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications