ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கியமான ஆட்டம் ஒன்றில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை வென்ற உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இலங்கையை பொறுத்தவரை பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவிடம் கடுமையாக போராடி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இலங்கை அணி வெற்றிக்காக இன்று பாடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இது குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் ஷனாகா, நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து இருக்கிறோம். ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் மாலை நேரத்தில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டதை கவனித்தோம்.
தனிப்பட்ட முறையில் நான் கடந்த போட்டியில் ரன்கள் அடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்காக பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக நான் கடுமையாக பயிற்சி செய்தேன். எங்கள் அணியில் இன்றைய ஆட்டத்தில் மகிஷா பதிராணா களமிறங்குகிறார். பந்து வீசும் போது நாங்கள் சரியான முறையில் செயல்பட வேண்டும்.

யாக்கர்களை சரியான நேரத்தில் வீசவேண்டும். மேலும் பந்தின் வேகத்தை வித்தியாசப்படுத்தி வீசினால் தான் பாகிஸ்தானை கட்டுப்படுத்த முடியும் என்று ஷனாகா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது. இதனால் முதல் 10 ஓவர் எங்களுக்கு மிகவும் முக்கியம்.
நாங்கள் ஹைதராபாத்தில் கடந்த இரண்டு வாரங்களாக இருக்கிறோம். இதனால் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்று எங்களுக்கு தெரியும். இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணியில் பக்கர் சமான் நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக ஷாபிக் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். நாங்கள் உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக நல்ல ரெகார்டை வைத்திருக்கிறோம். அது இன்றும் தொடரும் என நம்புகிறேன் என்று கூறினார்.