கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 31-வது அதிகாரத்தில் பாகிஸ்தானும் வங்கதேசமும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

வங்கதேசம் அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் தோல்வியை தழுவினால் அவர்கள் தொடரை விட்டு வெளியேறிவிடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் அவர்களும் வென்றே ஆக வேண்டும்.
இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிபுல் ஹசன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இந்த ஆடுகளத்தில் இரண்டாவது பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினம் என்பதால் இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய ஷஹிபுல் ஹசன் கடைசியாக நாங்கள் இங்கு விளையாடும் போது பந்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிற்கு வரவில்லை.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டது. இன்றைய ஆட்டத்திலும் ஆடுகளம் காய்ந்த நிலையில் இருக்கிறது. எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. முதல் 10 ஓவரில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். அதிலிருந்து நாங்கள் ஒரு பெரிய இலக்கை நிர்ணயம் செய்வோம் என்று நம்புகிறேன். இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை.
ஏதேனும் ஒரு வீரர் ஒரு சில ஆட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜொலித்தார்கள். ஆனால் ஒரு அணியாக நாங்கள் ஒன்றிணைந்து விளையாடவில்லை. அது நிச்சயம் ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிருந்து வங்கதேசம் மிகவும் அருகே என்பதால் எங்களுக்கு கொல்கத்தா மக்கள் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன் என்று ஷகிபுல் ஹசன் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். இருந்தாலும் பரவாயில்லை ஆடுகளம் கொஞ்சம் ஈர பதத்துடன் இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டு முதல் சில ஓவரில் ஸ்விங் செய்ய முயற்சி செய்வோம். கடந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என அனைத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வெற்றி பெற முடியவில்லை.

இந்தத் தொடரில் 50, 80 ரன்கள் என்று அடிக்கிறேன் இன்னும் சதத்தை தொட முடியவில்லை. அதற்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக சதத்தை அடிக்க முயற்சி செய்வேன். எங்கள் அணியில் இன்று மூன்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இமாம் உல் ஹக், சதாப்கான், நவாஸ் ஆகியோர் அணியை விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக பக்கர் சாமான், சல்மான் மற்றும் ஒசாமா ஆகியோர் அணிக்கு திரும்ப இருக்கிறார்கள் என்று பாபர் அசாம் கூறினார்.