உலககோப்பை கிரிக்கெட்டில் தங்க டிக்கெட் திட்டம்.. அப்படி என்றால் என்ன? சச்சின், அமிதாப்க்கு கிடைத்தது
மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
மேலும் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டத்தை காண 50 லட்சம் ரூபாய் வரை சிலர் செலவழித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இப்படி டிக்கெட்டுக்காக பலரும் போராடி வரும் நிலையில் தங்க டிக்கெட் என்ற ஒரு திட்டத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு இந்த தங்க டிக்கெட்கள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் விஐபி அந்தஸ்தில் அமர்ந்து பார்க்க முடியும். இதற்காக அவர்கள் எந்த பணத்தையும் செலவிட தேவையில்லை.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல் தங்க டிக்கெட்டை வழங்கினார். இதனை அடுத்து தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த தங்க டிக்கெட் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் பெருமை மற்றும் கிரிக்கெட்டின் சின்னமாக விளங்கும் சச்சின் டெண்டுல்கர் ஒரு தலைமுறை ஊக்குவித்தவர். இதனால் அவருக்கு தங்க டிக்கெட் வழங்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தனது twitter பக்கத்தில் கூறியுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு தங்க டிக்கெட்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த திட்டத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரு டிக்கெட்டுக்காக ரசிகர்கள் நாயாக பேயாக அழையும்போது பிரபலங்களுக்கு இவ்வாறு இலவச டிக்கெட் தேவைதானா என்று அவர்கள் கேள்வி கேட்டுள்ளனர். ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்கும்போது பிரபலங்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் தேவையா என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த தங்க டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கும் குலுக்கள் முறையில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications