டாக்கா : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.
இன்னும் இந்திய அணியில் யார் பிளேயிங் லெவனில் இறங்கப் போகிறார்கள் என்று தெரியாது. இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

அந்த அணியின் ஒருநாள் கேப்டனாக இருந்த தமிம் இக்பால் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஆசிய கோப்பை தொடரிலிருந்தும் தமிம் இக்பால் விலகிவிட்டார். இந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மீண்டும் ஷகிபுல் ஹசன் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நசீம் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் சகிபுல் ஹசன் ஆசிய கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் கேப்டனாக செயல்படுவார். அவர் தற்போது லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருகிறார். அவர் நாடு திரும்பியவுடன் இது குறித்து நாங்கள் பேசுவோம். அவர் வந்தவுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக இருப்பாரா இல்லை வங்கதேசத்தின் மூன்று பிரிவுகளிலும் அவர் கேப்டனாக செயல்படுவாரா என்பது தெரிய வரும்.
எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம் எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இவரை தவிர வேறு யார் வங்கதேச அணியை உலகக்கோப்பை தொடரில் வழி நடத்த முடியும். ஆனால் முதலில் முறைப்படி அறிவிப்பதற்கு முன் அவரிடம் நாங்கள் பேச வேண்டும். ஆனால் ஷகிபுல் ஹசன் தான் கேப்டன்.
அவர் தான் எங்களுக்கு இருக்கும் ஒரே முடிவு என அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். சகிபுல் ஹசன் கேப்டனாக இருந்தது இது முதல் முறை அல்ல. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போதே அவர்தான் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். வங்கதேச அணிக்காக 52 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அவர் செயல்பட்டு இருக்கிறார்.2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கேப்டனாக இருந்து மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து கேப்டனாக அதை உலகக்கோப்பை தொடரில் திரும்புவது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.