மும்பை : உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் யார் இடம் பெற வேண்டும் என்ற புது பஞ்சாயத்து உருவாகியுள்ளது.
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத ஸ்ரேயாஸ் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார்.

மேலும் ஸ்ரேயாஸ் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வதில் திறமையான வீரர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் சூரிய குமாரியாதவும் இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் என்பதால் அவருக்கும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய அணியில் சூரியகுமார் தேவையில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் பேட்டிங் வரிசையில் நம்பர் 6 மற்றும் ஏழாவது இடத்தில் கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா விளையாடினால் சூரிய குமார் யாதவுக்கு அந்த இடத்தில் வாய்ப்பே இருக்காது. அவ்வளவு ஏன் ஐந்தாவது இடத்திலும் சூரியகுமார் யாதவுக்கு இடம் இருக்காது.ஒருவேளை ஹர்திக் பாண்டியா உங்களுடைய ஆறாவது பேட்ஸ்மேன் என்றால் ராகுல் ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆக இருப்பார்.
அதன் பிறகு பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். முதலில் இஷான் கிஷன் நடு வரிசையில் இடம் பெறுவார் என நாம் நினைத்தோம். ஆனால் ஸ்ரேயாஸ் சதம் அடித்ததன் மூலம் அவர் நம்பர் நான்காவது வீரராக தான் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது. எனவே ஸ்ரேயாஸ், ராகுல், ஹர்திக் ஆகியோர் முறையே 4, 5, 6வது இடத்தில் விளையாட கூடும்.
இதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் ஹர்திக் பாண்டியா 10 ஓவர்களை முழுமையாக வீசினால் இந்தியா கூடுதலாக ஒரு பவுலரை சேர்த்துக் கொண்டு விளையாட முடியும்.அப்போதும் சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார். அப்படி இடம் கிடைத்தாலும் இஷான் கிசனுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும். ஏனென்றால் அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவர்தான் சேர்க்கப்படுவார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் எந்த அளவுக்கு பெரிய சாதனை எதுவும் செய்யவில்லை. ஒருநாள் போட்டிகளின் கடைசி 20 ஓவர்களில் வேண்டுமென்றால் அவருடைய டி20 திறமை நிச்சயமாக வெளிப்படும். ஆனால் இதையேதான் ஹர்திக், இஷான் கிஷன் ஆகியோர் செய்வார்கள். இதையும் மீறி சூரியகுமார் யாதவுக்கு இடம் வேண்டுமென்றால் அவர் நம்பர் நான்காவது வரிசையில் பெரிய சதம் அடிக்க வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளார்.