ICC உலககோப்பை தொடரில் ஒரு கால் வைத்த இலங்கை.. தகுதிச் சுற்றில் நெதர்லாந்துக்கு எதிராக சம்பவம்
ஹராரே : ஐசிசி உலககோப்பை தகுதிச் சுற்றின் சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணியும், நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து தொடக்க வீரர் நிசாங்கா டக் அவுட்டாக, கருணரத்னே 33 ரன்களும் எடுக்க, குசேல் மெண்டிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார் சமர்விக்ரமா 1 ரன்னிலும், அசலங்கா 2 ரன்களிலும் வெளியேற, கேப்டன் சனாகா 5 ரன்கள் மட்டுமே சேர்த்து அதிர்ச்சி தந்தார்.

எனினும் தனி ஆளாக போராடிய தனஞ்செய்யா 111 பந்துகளை எதிர்கொண்டு 93 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கே வீரர் தீக்சனா 28 ரன்களும்,ஹசரங்கா 20 ரன்களும் சேர்க்க இலங்கை அணி 47.4வது ஓவரில் 213 ரன்களுக்கு சுருண்டது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரமிஜித், மேக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினர். அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் வீஸ்லி மற்றும் பாஸ் டீ லீட் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்ட நிலையில் முக்கிய கட்டத்தில் இருவரும் வெளியேறினர்.
வீஸ்லி 52 ரன்களும், பாஸ் டி லீட் 41 ரன்களும் எடுத்து வெளியேறினர். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் மட்டும் அபாரமாக விளையாடி இலங்கையை பயமுறுத்தினார். எனினும் மற்ற வீரர்கள் அவருக்கு துணை நிற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் சம்பவம் செய்த லோகன் டன் அவுட்டாக, நெதர்லாந்து அணி 40 ஓவர் முடிவில் 192 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இன்னும் சூப்பர் 6 சுற்றில் இலங்கை ஒரு வெற்றியை பெற்றால் கூட உலககோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிடும்.


Click it and Unblock the Notifications