கொல்கத்தா : சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை தென்னாப்பிரிக்க அணி ஒருமுறை கூட ஐசிசி கோப்பை வென்றதில்லை. திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் ஆஸ்திரேலியாவுக்கு நிகரான பலம் இருந்தும் ஏன் தென்னாப்பிரிக்க அணியால் எந்த பெரிய தொடரையும் ஜெயிக்க முடியவில்லை என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எப்போதுமே உண்டு. .
காரணம் அவர்கள் நாக் அவுட் போட்டியில் தேவையில்லாத நெருக்கடிகளை உண்டாக்கி கொண்டு சொதப்பி விடுவார்கள். இதனால் தென்னாப்பிரிக்க அணியை சோக்கர்ஸ் என்று ரசிகர்கள் அழைப்பதுண்டு. இன்று, நேற்று அல்ல அவர்கள் 1992 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து இப்படித்தான் முக்கியமான போட்டிகளில் சொரப்பி விடுவார்கள்.

இல்லை தென்னாப்பிரிக்காவே வெற்றி பெறும் நிலையில் இருந்தால் மழை வந்து அவர்களுக்கு செய்வினை வைத்துவிடும். இப்படித்தான் 1992 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு எதிராக 13 பந்துக்கு 22 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ஒரு பந்துக்கு 22 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலையில் மாறிவிட்டது.
இதை கூட மன்னித்து விடலாம். ஆனால் 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் 214 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் தென்னாப்பிரிக்கா இருந்தது. கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. இதையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடித்து கடைசி பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்று நிலையில் இருந்தார்கள். ஆனால் எதிர் முனையில் நின்ற டோனால்ட் ரன் அவுட் ஆக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றில் ஒரு வெற்றியைப் பெற்றால் அடுத்த சுற்றுக்கு சென்று விடலாம் என்ற நிலை இருந்தது. அப்போது இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் எடுத்திருந்தால் டி ஆர் எஸ் விதிப்படி வென்று விடலாம். ஆனால் மார்க் பவுச்சர் அந்த பந்தில் மட்டை போட்டு ரன் எடுக்காமல் விட்டுவிடுவார். இதனால் மழை குறுக்கிட்டு இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டது. தற்போது போலவே முதல் 10 ஓவர்லே தென்னாப்பிரிக்கா அணி பல விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனை ஆஸ்திரேலியா எளிதில் சேசிங் செய்தது. இதேபோன்று 2011 ஆம் ஆண்டு காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து எதிர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி 222 என்ற இலக்கை துரத்தியது.
அப்போது 108 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என பலமான நிலையில் இருந்த போது நியூசிலாந்து வீரர் ஜேக்கப் ஓரம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த தென்னாபிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. இதேபோன்று 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முக்கிய கேட்ச் வாய்ப்பை விட நியூசிலாந்த அணி 43 ஓவரில் 292 ரன்களை சேசிங் செய்தது.
அப்போதும் மழை குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் கூட தென்னாப்பிரிக்க அணி நெருப்புகளை காக்கும் டிராகன் போல் இருந்து வந்தது. ஆனால் நாக் அவுட் போட்டியில் தண்ணீர் பாம்பாக மாறி சொதப்பி மீண்டும் தோல்வியை தழுவி விட்டது. பந்துவீச்சில் போராடினாலும் பேட்டிங்கில் தடுமாறியதால் இன்றும் தோல்வி கிடைத்தது.