திருவனந்தபுரம் : சர்வதேச கிரிக்கெட் உலகில் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தான் மிகப்பெரிய தொடராக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் லெவலுக்கு ஒரு தொடர் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஐசிசி பெறும்.
இந்த வகையில் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் வரும் வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. பொதுவாக இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது என்றால் அது பிப்ரவரி இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும்.

ஏனென்றால் கோடை காலத்தில் மழை நிச்சயமாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்படும். ஆனால் ஐபிஎல் போட்டிகள் தற்போது கோடையில் நடைபெறுவதால் அதற்கு ஆபத்தை ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காக பி சி சி ஐ தலையீட்டில் தற்போது ஐசிசி உலகக் கோப்பை சம்பந்தமே இல்லாமல் மழைக்காலமான அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுகிறது.
இந்த உலகக் கோப்பை மூலம் சுமார் 6000 கோடி வரை வருமானத்தை ஈட்ட முடியும் என ஐசிசி நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால் தற்போது ஜெய்ஷா தலையீடால் உலகக் கோப்பை அக்டோபர் மாதம் நடத்தப்படுவதால் பல முக்கிய போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை எப்படி நடைபெறும் என்பதற்கு தற்போது ஒரு டீசராக பயிற்சி ஆட்டம் அமைந்திருக்கிறது.

இதுவரை 10 பயிற்சி ஆட்டங்கள் நடந்திருக்கிறது. இதில் ஆறு பயிற்சி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் நான்கு பயிற்சி ஆட்டங்கள் மழை காரணமாக பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியா பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தை எதிர்கொள்ள இருந்தது.

இதில் மழையால் இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் தற்போது மழை பெய்து இந்திய ரசிகர்களை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது. இதேபோன்று தொடர்ந்து மழை பெய்து ஆட்டங்கள் நடத்த முடியாமல் போனால் சுமார் 2000 கோடி ரூபாய் அளவுக்கு ஐசிசிக்கு நஷ்டம் ஏற்படும். ஐபிஎல் தொடருக்காக தற்போது ஐசிசி உலக கோப்பையை காவு வாங்க பிசிசிஐ முயற்சி செய்து விட்டது என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.