அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக கைப்பற்றி இருக்கிறது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி எதிர்கொண்ட ஆஸ்திரேலிய ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய ரசிகர்கள் சோகமாக இருந்தனர். இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், இதுபோன்று கடைசியில் சிறப்பான ஒரு ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த தான் எங்கள் சக்தியை பாதுகாத்து வைத்திருந்தோம் என்று நினைக்கிறேன்.

இன்றைய நாளில் இரண்டு மிகப்பெரிய வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு விளையாடினார்கள். இன்றைய நாளில் சேஸிங் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினோம். ஆடுகளத்தை பார்க்கும் போது சேசிங் செய்தால் சுலபமாக இருக்கும் என நினைத்தேன். ஏனென்றால் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருந்தது.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் ஆடுகளம் செயல்படவில்லை. எங்களுடைய ஃபீல்டர்கள் இரண்டு சிறந்த கேட்ச்களை பிடித்தார்கள். இது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எங்களுடைய பில்டர்களும் சிறப்பான முறையில் பவுண்டரிகளை தடுத்தார்கள். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கூட எங்களுடைய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் அணி வீரர்களுக்கு வயதாகி வருகிறது. எனினும் ஆடுகளத்தில் பாய்ந்து பந்துகளை தடுத்தோம்.
240 ரன்களுக்குள் இந்தியாவை தடுத்தது எங்களுக்கு சாதகமாக மாறி இருந்தது. 300 ரன்களுக்குள் எந்த இலக்கை இந்தியா எடுத்திருந்தாலும் நாங்கள் சேசிங் செய்திருப்போம். அதற்கு மேல் சென்று இருந்தால் நிச்சயம் கடினமாக இருந்திருக்கும். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்தவுடன் என்னுடைய இதயம் துடிதுடித்தது. ஆனால் டிராவிஸ் ஹேட் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
டிராவிஸ் ஹேட் காயம் அடைந்தும் அவரை அணியிலிருந்து நீக்காமல் அணியில் வைத்திருந்தது தேர்வு குழுவினருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எடுத்த ரிஸ்க்கு இன்று பலன் அளித்தது. இந்தியா போன்ற கிரிக்கெட் விரும்பி பார்க்கும் மக்கள் முன் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் சொன்னது போல் ரசிகர்களை அமைதியாக்கி விட்டோம் என நினைக்கிறேன்.
இருப்பினும் நாங்கள் வென்றிருந்தாலும் தோற்று இருந்தாலும் இவ்வளவு பெரிய மக்கள் முன் விளையாடி அனுபவத்தை வாழ்நாளில் மறக்க மாட்டோம். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பிறகு எங்களுடைய ஆட்டத்திறனை நாங்கள் மாற்றி தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி எங்களுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். இந்த ஆண்டில் எங்களால் மறக்க முடியாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசஸ், உலகக் கோப்பை என அனைத்திலும் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.