நாக்பூர்: உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் சூப்பர் 10 போட்டியில் நியூசிலாந்து சுழலில் சிக்கிய இந்திய அணி 47 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 10 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் குப்தில், கேன் வில்லியம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் முதல் பந்தை சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். அஸ்வின் வீசிய முதல் பந்தை குப்தில் சிக்சருக்கு விளாசினார்.
இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரை குப்தில் சிக்சருடன் தொடங்கினார். ஆனால் ஆடுத்த பந்தில் அவர் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து கொலின் முன்றோ களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் 4-வது பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்று விளாசினார்.
அஸ்வின் முதல் ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த ஓவரை நெஹ்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் முன்றோ அவுட் ஆனார். நியூசிலாந்து அணி முதல் 2 ஓவரில் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
3-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சனுடன் கோரி ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. அஸ்வின் வீசிய 5-வது ஓவரில் ஆண்டர்சன் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்திருந்தது.7-வது ஓவர் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டது. இந்த ஓவரின் 5-வது பந்தில் வில்லியம்சன் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அவர் 16 பந்தில் 8 ரன்கள்
மட்டுமே எடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு கோரி ஆண்டர்சனுடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்தியாவின் அசத்தலான பந்து வீச்சால் நியூசிலாந்து ரன்கள் குவிக்க திணறியது.
டெய்லர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து கோரி ஆண்டர்சனுடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடிய போதும் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை.
தொடர்ந்து ஆடிய கோரி ஆண்டர்சன் 34 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து எலியாட் களம் இறங்கினார். சான்ட்னெர் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.
இதையடுத்து நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் நெஹ்ரா, அஸ்வின், பும்ப்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
நியூசிலாந்தை அடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ஆரம்பம் முதலே தடுமாறியது. ரோகித் சர்மா (5), ஷிகர் தவான் (1), கோஹ்லி(23), ரெய்னா(1), யுவராஜ்(4),டோணி(30),பாண்ட்யா(1), ஜடோஜா (0), அஷ்வின்(10), நெஹ்ரா(0), பும்ப்ரா (0), என இந்திய அணி 18.1 ஓவரில் 79 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதனால் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய சான்ட்னர் 4 விக்கெட் வீழ்த்தினார்