WTC Final: மார்கிரம் வெளியேறியபோது ஓடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. நெகிழ வைத்த காட்சி.. என்ன நடந்தது?
லண்டன்: தென் ஆப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடித்த சதம், தென்னாப்பிரிக்க அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றது. அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறியபோது, ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று கைதட்டியது.
மேலும், இந்தப்போட்டியில் அப்போது தோல்விக்கு அருகே இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் மார்க்ரம் அருகே வந்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அது கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைக்கும் சம்பவமாக இருந்தது. அந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக மார்க்ரம் அடித்த இந்த சதம் அமைந்தது. எந்த சூழ்நிலையில் அவர் இந்த சதத்தை அடித்தார் என்பது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் தான் அதிக ஸ்கோர் அடிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மார்க்ரம் அடித்த சதம் தான். இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்திருந்தன. ஆஸ்திரேலியா 74 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
அப்போது ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், 200 ரன்கள் என்ற இலக்கை கூட தென்னாப்பிரிக்கா எட்ட முடியாது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதை தென்னாப்பிரிக்க அணி எட்டாது என பலரும் நினைத்தனர்.
ஆனால், ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தது. அதை பயன்படுத்திக் கொண்ட எய்டன் மார்க்ரம் அபாரமாக ஆடி, மூன்றாம் நாள் முடிவில் சதம் அடித்தார். அப்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா அரை சதம் அடித்திருந்தார். இந்த நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தில் பவுமா துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார். அப்போது தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 50 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
அந்த நிலையில், எய்டன் மார்க்ரம் பொறுப்பாக விளையாடினார். அப்போது மட்டும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தால், இந்தப் போட்டி நிச்சயம் ஆஸ்திரேலியாவசம் சென்றிருக்கும். ஆனால் தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடிய மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவை எனும் நிலையில் ஆட்டமிழந்தார். அவர் அப்போது 136 ரன்கள் எடுத்திருந்தார்.
அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறியபோது, ஒட்டுமொத்த லார்ட்ஸ் மைதானமும் எழுந்து நின்று அவரை வாழ்த்தியது. ஆஸ்திரேலிய வீரர்கள் தோல்விக்கு அருகே இருந்தாலும், மார்க்ரம் சதம் எத்தகையது என்பதை உணர்ந்து அவருக்கு அருகில் வந்து அவரைப் பாராட்டினார்கள். இந்தக் காட்சி கிரிக்கெட் வட்டாரத்தில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்று சொல்லவேண்டும்.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதன்முறையாக 27 ஆண்டுகளில் ஒரு ஐசிசி கோப்பையை தென்னாப்பிரிக்கா வென்று இருக்கிறது. மேலும், மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications