
விலகும் சாஸ்திரி
இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு இப்போது அந்தப் பொறுப்பில் இருக்கும் ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். சுவாரஸ்யம் என்னவெனில், டிராவிட்டை தவிர வேறு எவரும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை பிசிசிஐ மேலும் சில நாட்களுக்கு நீட்டித்துள்ளது. டி20 உலகக்கோப்பையுடன் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை.

ராகுல் டிராவிட்
எனவே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஏனெனில், கடந்த மாதம் இலங்கையில் விளையாடிய ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ராகுல் டிராவிட். இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்த டிராவிட்டை, சர்வதேச அணியின் பயிற்சியாளராக நியமித்தது பிசிசிஐ. இந்திய 'ஏ' அணி, டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் இருந்ததால், ராகுல் டிராவிட்டே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பட்டைத் தீட்டும் இடம்
இந்த நிலையில் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த பதவிக்கு வேறு எவருமே விண்ணப்பிக்கவும் இல்லை. இதனால், அவரே மீண்டும் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. என்சிஏ தலைவர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. வீரர்களை பட்டைத் தீட்டும் இடம் அது. குறிப்பாக, சரியான, தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களை ட்ரெயின் செய்யும் இடம் அது. இதனால், டிராவிட் மீண்டும் விண்ணப்பித்ததில் ஆச்சர்யம் அடைவதற்கு எதுவும் இல்லை.

நானே ராஜா.. நானே மந்திரி
அப்படியெனில், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட டிராவிட் விரும்பவில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து நாம் சில கிரிக்கெட் ஆர்வலர்களிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், "கோலி - டிராவிட் காம்போ இணைவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறலாம். இருவருக்கும் அவ்வளவாக செட் ஆகும் என்று தோன்றவில்லை. டிராவிட், கும்பளே, ஷேவாக் போன்றவர்கள் எல்லாம் எதையும் ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்யும் அல்லது ஃபாலோ செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பர்வர்கள். கோலி இந்த கட்டுப்பாட்டை விரும்பமாட்டார். அவரைப் பொறுத்தவரை 'நானே ராஜா.. நானே மந்திரி' பாலிசி கொண்டவர். இந்த மனநிலையால் தான், கோலியால் அனில் கும்ப்ளேவுடன் ஜெல் ஆக முடியாமல் மோதல் ஏற்பட்டது. எங்களை ஸ்கூல் பிள்ளைகள் போன்று நடத்துகிறார் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஸ்ட்ரீட் கிரிக்கெட் அல்ல
அப்படி, கும்ப்ளே போன்று அதிக டிசிப்ளின், கட்டுப்பாடுகளை எதிபார்ப்பவர் ராகுல் டிராவிட். ஸோ, டிராவிட் அணியில் இணைவதை கோலி விரும்பமாட்டார் என்றனர். அதேசமயம், மற்றோரு தரப்பினர், "அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இது சர்வதேச கிரிக்கெட். சிறுபிள்ளைகள் விளையாடும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் அல்ல. இங்கே கோலியால் மாத்திரம் எல்லா முடிவுகளையும் எடுக்க முடியாது. அணிக்கு யார் தேவை என்பதை பிசிசிஐ தான் முடிவெடுக்கும். அவர்கள் நினைத்தால், டிராவிட் மறுநாள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார். தவிர, விராட் கோலியும் ஒரு புரஃபஷனல் கிரிக்கெட்டர். அதற்கு ஏற்றார் போல் தான் அவர் அனைத்தையும் அணுகுவார். அணிக்கு தேவை என்றால், டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவதில் அவர் எந்த தயக்கமும் காட்ட வேண்டிய அவசியமில்லை" என்றனர்.


Click it and Unblock the Notifications











