துபாய்: துபாய் கேப்பிடல்ஸ் அணி இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் தனது முதல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத நிலையில், குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு அணி முதன்முறையாக கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் அணியும், துபாய் கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெசர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மேக்ஸ் ஹோல்டன் 51 பந்துகளில் 76 ரன்களும், கேப்டன் சாம் கர்ரன் 33 பந்துகளில் 62 ரன்களும், ஆஸம் கான் 13 பந்துகளில் 27 ரன்களும் சேர்த்தனர்.

190 ரன்கள் என்ற இலக்குடன் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. துவக்க வீரர் ஷாய் ஹோப் 39 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். டேவிட் வார்னர் 4 ரன்களிலும், குலாப்தீன் 5 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து ஐந்தாம் வரிசையில் இறங்கிய ரோவ்மன் பாவல் அதிரடி ஆட்டம் ஆடி 38 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.
வெற்றிக்கு அதிக ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தசுன் ஷனகா 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். ஏழாம் வரிசையில் இறங்கிய ஜிம்பாப்வே அணியின் முன்னணி வீரர் சிக்கந்தர் ராசா 12 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 283 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்.
19.2 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் முதன்முறையாக டெல்லி கேப்பிட்டல்ஸ் குழுமத்தைச் சேர்ந்த துபாய் கேப்பிட்டல்ஸ் டி20 கோப்பையை வென்று அசத்தியது.