நீயெல்லாம் மனுஷனே இல்ல.. 8 சிக்ஸ், 6 ஃபோர்.. 16 பந்தில் அரைசதம்.. கதற விட்ட அவிஷ்கா பெர்னாண்டோ
ஷார்ஜா: இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் துபாய் கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 16 பந்துகளில் அரை சதம் அடித்து மிரள வைத்தார்.
27 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து சுமார் 300 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து சார்ஜா வாரியர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். அவர் ஆறு ஃபோர் மற்றும் எட்டு சிக்ஸர்களை அடித்து இருந்தார். அவரது ஆட்டத்தால் இன்டர்நேஷனல் டி20 வரலாற்றிலேயே மிகப்பெரிய சேஸிங்கை 11 பந்துகள் மீதமிருக்கும் போதே செய்து முடித்தது ஷார்ஜா வாரியர்ஸ் அணி.

மேலும், அவிஷ்கா பெர்னாண்டோ இந்த டி20 தொடரின் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்து இருந்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியில் ஷாய் ஹோப் 52 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து இருந்தார். பென் டங்க் 21 ரன்களும், மெக்முல்லன் 22 ரன்களும், சிக்கந்தர் ராசா 27 ரன்களும், ரோவ்மன் பாவல் 28 ரன்களும் சேர்த்து இருந்தனர்.
இதற்கு முன் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் 202 ரன்கள் என்ற இலக்கை எந்த அணியும் சேசிங் செய்ததில்லை என்ற நிலையில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆன ஜேசன் ராய் 24 பந்துகளில் 26 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 19 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
மூன்றாவதாக இறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ அதிரடியின் உச்சத்துக்கு சென்றார். இடைவிடாமல் சிக்ஸர்களை அடித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரது ஆட்டத்தால் துவண்டு போனது துபாய் கேப்பிடல்ஸ் அணி. 16 பந்துகளில் அரை சதம் கடந்த அவிஷ்கா பெர்னாண்டோ, அதன் பின் அதே வேகத்தில் ரன் குவித்தார். ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார்.
27 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து 16 வது ஓவரில் அவிஷ்கா பெர்னாண்டோ ஆட்டம் இழந்தார். அப்போது வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருந்தது ஷார்ஜா வாரியர்ஸ் அணி. அதன் பின் அந்த இலக்கை ஷார்ஜா அணி 16 பந்துகளில் எடுத்தது. 18.1 ஓவரில் 202 ரன்கள் என்ற இலக்கை எட்டியது ஷார்ஜா வாரியர்ஸ். அதன்மூலம் இன்டர்நேஷனல் லீக் டி20 வரலாற்றிலேயே மிகப் பெரிய சேஸிங்கை செய்த அணி என்ற சாதனையையும் செய்தது.


Click it and Unblock the Notifications