இம்ரான் கான் மகன்களின் பேட்டியால் சர்ச்சை.. இங்கிலாந்து டெஸ்ட்டை பாதியில் நிறுத்த முயன்ற பாகிஸ்தான்
லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், உலகக் கோப்பை வென்று தந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானின் மகன்கள் அளித்த பேட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் பிரபல விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமான ஸ்கை ஸ்போர்ட்ஸ் இடையே கடுமையான மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் மகன்கள் சுலைமான் மற்றும் காசிம் ஆகியோரின் நேர்காணலை ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பியது. இதனை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் நடத்தினார்.

இந்த 18 நிமிட நேர்காணலில், இம்ரான் கானின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அவரை சிறையிலேயே கொல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவரது மகன்கள் குற்றம் சாட்டினர். மேலும் 23 மணி நேரத்திற்கும் மேலாக அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் கூறினர். பாகிஸ்தானில் இந்த கிரிக்கெட் போட்டி அரசு தொலைக்காட்சியான பிடிவி-யில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் இந்த பேட்டி மட்டும் அங்கு ஒளிபரப்பாகவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) அதிகாரிகள் போட்டி தொடங்குவதற்கு முன்பே ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை ஒளிபரப்பினால், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டத்தை புறக்கணித்து மைதானத்திற்கு செல்ல மாட்டார்கள் என பிசிபி மிரட்டல் விடுத்தது. இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிசிபியின் எதிர்ப்பால் இந்த நேர்காணல் சற்று தாமதமாக ஒளிபரப்பப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டபடி மைதானத்திற்கு திரும்பினர். கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் இம்ரான் கானை அரசு கொடுமைப்படுத்தவில்லை என்றும், அவருக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க போதுமான அனுமதி வழங்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த அரசியல் விவகாரம் தற்போது கிரிக்கெட் அரங்கிலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
