"2011 உலகக்கோப்பையில் யுவராஜ் வேண்டாம்".. ஸ்ரீகாந்த் vs தோனி.. உண்மையை உடைத்த கேரி கிர்ஸ்டன்!
மும்பை: 2011 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று தந்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், தற்போது ஒரு முக்கிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அந்த உலகக் கோப்பை தொடரின் நாயகனாகத் திகழ்ந்த ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், அப்போதைய உலகக்கோப்பை அணித் தேர்வில் உறுதியாக தேர்வு செய்யப்படும் ஒரு வீரராக இருக்கவில்லை எனவும், அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் கேப்டன் தோனி இடையே விவாதம் நடந்ததாகவும் கூறி இருக்கிறார் கிர்ஸ்டன்.
2010 ஆம் ஆண்டு யுவராஜ் சிங்கிற்கு சுமாரான ஆண்டாகவே அமைந்தது. ஜனவரி 2010 முதல் பிப்ரவரி 19, 2011 வரை, அவர் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 440 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், 2011 உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுக்கும் போது, அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான அணித் தேர்வு கூட்டத்தில் யுவராஜ் சிங்கின் பெயர் பெரும் விவாதப் பொருளாக இருந்தது. அவரை அணியில் சேர்ப்பது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில்தான், அப்போதைய கேப்டன் தோனியும், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும் யுவராஜ் சிங்கிற்கு ஆதரவாக வலுவாக நின்றனர். அணியில் அவரது அனுபவம் மிகவும் முக்கியம் என்று அவர்கள் இருவரும் வாதிட்டனர்.
இதுகுறித்து கிர்ஸ்டன் கூறுகையில், "கடவுளின் புண்ணியத்தில் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தோம், ஏனென்றால் அது மிகவும் நூலிழையில் எடுக்கப்பட்ட முடிவு. அது ஒரு உறுதியான தேர்வாக இருக்கவில்லை. 15 வீரர்கள் கொண்ட அணியை இறுதி செய்வதில் தேர்வாளர்கள் கடுமையாக விவாதித்தனர். யுவராஜ் அணிக்கு கொண்டுவரும் அனுபவத்தின் காரணமாக, நானும் தோனியும் அவரை அணியில் சேர்க்க மிகவும் உறுதியாக இருந்தோம். இறுதியில் அவர் உலகக் கோப்பையில் எப்படி விளையாடினார் என்று நீங்களே பாருங்கள்" என்றார்.
மேலும் யுவராஜுடனான தனது உறவு பற்றிப் கேரி கிர்ஸ்டன் பேசுகையில், "நான் எப்போதுமே யுவராஜின் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தேன். எங்களுடைய உறவு விசித்திரமானது. சில சமயங்களில் அவர் என்னை மிகவும் எரிச்சலூட்டுவார். ஆனால், நான் அவரை நேசித்தேன். அவர் ஒரு சிறந்த வீரர். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம், அதனால் அவர் எப்போதும் ரன் குவிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்," என்று கூறினார்.
யுவராஜ் சிங்கின் இந்த சிறப்பான செயல்பாட்டுக்கு, அப்போதைய இந்திய அணியின் மனநல ஆலோசகர் பேடி அப்டனின் பங்கு முக்கியமானது என்றும் கிர்ஸ்டன் பெருமையுடன் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "யுவியை அந்த உலகக் கோப்பைக்குத் தயார்படுத்துவதில் பேடி அப்டன் பெரும் பங்காற்றினார். உலகக் கோப்பைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் யுவராஜும் சில முக்கிய முடிவுகளை எடுத்தார்" என்று தெரிவித்தார்.
அணியின் நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை யுவராஜ் சிங் வீணாக்கவில்லை. உலகக் கோப்பையில் மிகச்சிறப்பாக விளையாடி 362 ரன்கள் குவித்ததோடு, 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். தொடர் நாயகன் விருதையும் வென்று, தன் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றினார்.


Click it and Unblock the Notifications