Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துருவ் ஜுரல் ஓகே.. ஆனா ஸ்ரேயாஸ்-க்கு வாய்ப்பு இல்லை.. ஆஸ்திரேலியா ஏ போட்டியில் என்ன நடந்தது?

லக்னோ: லக்னோவில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி, எதிர்பார்த்தபடியே டிராவில் முடிவடைந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரன்கள் குவிந்தனவே தவிர, விக்கெட் வீழ்ச்சி மிகவும் குறைவாகவே இருந்தது. மொத்தமாக 1119 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில், வெறும் 13 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன. இந்தப் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள் எப்படி செயல்பட்டார்கள்? இந்தப் போட்டியின் மூலம் அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் யார், யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கக் கூடும்? என்று பார்க்கலாம்.

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல்லின் அபாரமான ஆட்டமும், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் ஏமாற்றமும் தான் இந்தப் போட்டியில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Dhruv Jurel Prasidh Krishna Indian Test Team

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், இந்தப் போட்டி இந்திய அணியின் சில முக்கிய வீரர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. இதில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஏமாற்றமளித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த அவர், இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கியது கவலை அளிக்கிறது.

இங்கிலாந்திலும் அவரது கட்டுப்பாடற்ற, ரன்களை வாரி இறைக்கும் பந்துவீச்சு பிரச்சனையாக இருந்தது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் அவர் 16 ஓவர்களில் 86 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை. இது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அவரது தேர்வை பாதிக்கக்கூடும். இந்திய ஏ அணி தரப்பில் ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகபட்ச விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை, இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அபிமன்யு ஈஸ்வரன், என். ஜெகதீசன், மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் நல்ல தொடக்கங்களைப் பெற்றாலும், அதனை சதமாக மாற்றத் தவறினர். ஜெகதீசன் 64 ரன்களும், சாய் சுதர்சன் 73 ரன்கள் குவித்தனர். தேவ்தத் படிக்கல் 150 ரன்கள் குவித்து அசத்தினார். துருவ் ஜுரல் 140 ரன்கள் குவித்தார்.

ஆனால், இந்த போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ரேயாஸ் ஐயர்தான். டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பும் முனைப்பில் இருந்த அவருக்கு இந்தப் போட்டி முக்கிய வாய்ப்பாகக் கருதப்பட்டது. சர்பராஸ் கானுக்கு ஏற்பட்ட காயம் மற்றும் ரஞ்சி டிராபியில் அவரது மோசமான பார்ம் ஆகியவை ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு கதவைத் திறப்பதாக இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இந்தப் போட்டியிலும், முன்னதாக நடைபெற்ற துலீப் டிராபியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார். எனவே, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

இந்தச் சூழ்நிலையில், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், தனக்கான வாய்ப்பை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட்டிற்கு மாற்று வீரராக இருந்த ஜூரல், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆறாவது பேட்டிங் வரிசைக்கு பலமான போட்டியாக மாறி இருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக நான்கு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த அவர், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராகவும் தனது சிறப்பான ஃபார்மைத் தொடர்ந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு வந்ததால், ஜூரலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் காயத்தில் சிக்கி இருக்கும் பண்ட்டின் பங்கேற்பும் உறுதியாகாத நிலையில், ஜூரல் ஒரு முழுமையான பேட்ஸ்மேனாகவே டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் தகுதியை நிரூபித்துள்ளார்.

Story first published: Friday, September 19, 2025, 18:20 [IST]
Other articles published on Sep 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+