IND A vs NZ A: கேஎல் ராகுல், ஜெய்ஸ்வாலை முந்தி இந்திய ஏ அணி கேப்டனாக துருவ் ஜூரல் தேர்வு
மும்பை: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய ஏ அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்டர் துருவ் ஜூரெல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆக்ராவைச் சேர்ந்த இந்த இளம் வீரர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற முன்னணி இந்திய அணி வீரர்களை முந்தி கேப்டன் பொறுப்பை பெற்றுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் துணை கேப்டன் ரிஷப் பண்ட் இந்த 15 பேர் கொண்ட இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவரது பங்கேற்பு உடல்தகுதியை பொறுத்தே அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்காக பிசிசிஐ தேர்வு குழுவினர் மிகவும் வலுவான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர். இதில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் கே.எல். ராகுல், தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், முகேஷ் குமார், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்திய அணியில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.nமேலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட கர்நாடகாவின் ரவிச்சந்திரன் ஸ்மரன், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி தார், மகாராஷ்டிராவின் முகேஷ் சவுத்ரி மற்றும் விதர்பா பேட்டர் யாஷ் ரத்தோடு ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஸ்மரன் அண்மையில் நடைபெற்ற இரானி கோப்பையின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தியிருந்தார். அதேபோல், புதுச்சேரியில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது தகுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யாஷ் ரத்தோடு சிறந்த பேட்டிங் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார், முகேஷ் சவுத்ரி இரானி கோப்பையின் முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்திருந்தார்.
முன்னதாக, நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய ஏ அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று செய்திகள் பரவின. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள பும்ரா, கடைசியாக நவம்பர் 2025 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். காயம் காரணமாக ஆகஸ்ட் 2026 இல் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடவில்லை.
இந்திய அணி விவரம்: துருவ் ஜூரெல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் ஸ்மரன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)*, வாஷிங்டன் சுந்தர், ஆகிப் நபி, ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், மானவ் சுதார், முகேஷ் சவுத்ரி, சாய் சுதர்சன், யாஷ் ரத்தோடு, முகேஷ் குமார். அக்டோபர் 24ஆம் தேதி அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியும், அக்டோபர் 31 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியும், நவம்பர் 7 மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.


Click it and Unblock the Notifications


