வம்புக்கு இழுந்த பாகிஸ்தான் பவுலர்.. சண்டைக்கு சென்ற அபிஷேக் சர்மா.. சமாதானம் செய்த நடுவர்!
துபாய்: பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் சுபியான் முகீமுடன் இந்திய ஏ அணியின் அபிஷேக் சர்மா நேரடியாக மோதலில் ஈடுபட முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பின்னர் பாகிஸ்தான் வீரர்களும், நடுவரும் இணைந்து அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஏசிசி ஆடவர் டி20 வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்து இந்தியா ஏ அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்தியா ஏ அணி அதிரடியில் பொளந்து கட்டியது.

20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 35 பந்துகளில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 44 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 19 பந்துகளில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 36 ரன்களும், அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 35 ரன்களையும் விளாசினர். இந்தப் போட்டியின் போது அபிஷேக் சர்மா மற்றும் பாகிஸ்தான் வீரர் சுபியான் முகீம் மோதலில் ஈடுபட்டனர்.
இந்திய அணிக்காக தொடக்கம் கொடுத்த அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்களை குவித்தது. அதிலும் பவர் பிளேவின் கடைசி ஓவரை வீசிய அப்பாஸ் அப்ரிடி பவுலிங்கில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக 2 பவுண்டரி, 2 சிக்சரை பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் உட்பட 25 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் டென்ஷனாகினர்.
தொடர்ந்து 7வது ஓவரை வீசுவதற்கு சுபியான் முகீம் அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா அட்டாக் செய்ய முயற்சித்தார். ஆனால் அந்த பந்து நேரடியாக காசிம் அக்ரம் கைகளுக்கு சென்று கேட்சானது. அப்போது பாகிஸ்தான் பவுலர் சுபியான் முகீம், ”வெளியே போ” என்பது போல் ஒற்றை விரலை காட்டி மிரட்டுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனை இந்திய அணியின் அபிஷேக் சர்மா கவனித்தார்.
இதனால் டென்ஷனான அபிஷேக் சர்மா, ”என்ன சொன்னாய்” என்று நேரடியாக கேள்வி எழுப்பி மோதலுக்கு தயாரானார். சூழலை உணர்ந்த நடுவர் மற்றும் சக பாகிஸ்தான் வீரர்கள் அபிஷேக் சர்மாவை பெவிலியன் நோக்கி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி என்றாலே, அனல் பறக்கும் என்பதற்கு இந்தப் போட்டி மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications