IND A vs SA A: 4 சிக்சர், 5 பவுண்டரி காயத்திலிருந்து மீண்டும் வந்து ரிஷப் பண்ட் அதிரடி.. 417 ரன்கள் இலக்கு
பெங்களூர்: தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய நிலையில், அதன் பின் மீண்டும் களம் இறங்கி சிக்சர், பவுண்டரி என அடித்து அசத்தினார்.
இரண்டு நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 255 ரன்கள் ஆட்டம் இழக்க, தென்னாபிரிக்க ஏ அணி 221 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 34 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்திய ஏ அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 78 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய ஏ அணி ஆரம்பித்தது. இதில் ராகுல் 27 ரன்களிலும், குல்தீப் யாதவும் 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
அப்போது ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்க ஏ அணி வீரர்கள் தொடர்ந்து ஷார்ட் பால் வீசியதால் அது அவரது உடலை பதம் பார்த்தது. இதனால் வலியால் துடித்த ரிஷப் பண்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதனால் அவர் மீண்டும் களத்திற்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரிஷப் பண்ட் மீண்டும் களத்திற்கு திரும்பி ஐந்து பௌண்டரி, நான்கு சிக்சர் என 54 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 120 என்று அளவில் இருந்தது. இதேபோன்று முதல் இன்னிங்சை சதம் விளாசிய துருவ் ஜூரல் இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஹர்ஷ் துபே 84 ரன்கள் எடுக்க இந்திய ஏ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க ஏ அணி விளையாடியது.மூன்றாவது நாள் ஆட்டநேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 25 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியிருக்கிறது. தென்ஆப்பிரிக்க ஏ அணி வெற்றிக்கும் 392 ரன்களும் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications