பெங்களூர்: பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்தியா 'ஏ' அணி நிர்ணயித்த 417 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக எட்டி, தென்னாப்பிரிக்கா 'ஏ' அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து தனி ஒருவனாகப் போராடிய போதிலும், தென்னாப்பிரிக்க வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்திற்கு முன் அது பலனளிக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா 'ஏ' அணி சமன் செய்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி, போட்டியின் முதல் ஓவரிலேயே அபிமன்யு ஈஸ்வரனின் விக்கெட்டை இழந்து தடுமாற்றத்துடன் தொடங்கியது. கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் என முக்கிய வீரர்கள் நிலைத்து நிற்கத் தவறியதால், அணி 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அப்போது களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், சில அதிரடி பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சரிவின் பிடியில் சிக்கியிருந்த அணியை, இளம் வீரர் துருவ் ஜூரல் தனது அபாரமான பேட்டிங்கால் தனி ஒருவராக மீட்டார். மிகுந்த பொறுமையுடனும், நிதானத்துடனும் விளையாடிய அவர், கடைசி வரிசை வீரர்களுடன் இணைந்து முக்கியமான பார்ட்னர்ஷிப்களை அமைத்து, ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் குவித்தார். இதனால், இந்தியா 'ஏ' அணி தனது முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. தென்னாப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்கள் மட்டுமே எடுத்தது.
34 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா 'ஏ' அணி, மீண்டும் ஒருமுறை டாப் ஆர்டர் சரிவைச் சந்தித்தது. 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், மீண்டும் அணியின் பொறுப்பான பேட்ஸ்மேனாக உருவெடுத்தார் துருவ் ஜூரல். ஹர்ஷ் துபேயுடன் இணைந்து 184 ரன்களுக்குக் கூட்டணி அமைத்த அவர், இந்த இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார். ஹர்ஷ் துபே 84 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 65 ரன்கள் குவிக்க, இந்தியா 'ஏ' அணி 7 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு 417 ரன்கள் என்ற பிரம்மாண்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
417 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க 'ஏ' அணி, நிதானத்துடன் ஆட்டத்தை அணுகியது. தொடக்க வீரர்களான ஜோர்டான் ஹெர்மன் 91 ரன்களும், லெசெகோ செனோக்வானே 77 ரன்களும் சேர்த்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்து, இந்திய பந்துவீச்சாளர்களைச் சோர்ந்து போகச் செய்தனர்.
தொடர்ந்து வந்த சுபைர் ஹம்சா 77 ரன்கள், டெம்பா பவுமா 59 ரன்கள் மற்றும் கானர் எஸ்டர்ஹுய்சன் 52* ரன்கள் ஆகியோரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, தென்னாப்பிரிக்க 'ஏ' அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இமாலய இலக்கை எட்டி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் திணறினார் கேப்டன் ரிஷப் பண்ட். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா 400 ரன்களை எட்டிய போது, 417 ரன் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தும் தோல்வி கிடைக்கப் போகிறது என்பதை நம்ப முடியாமல் உறைந்து போய் நின்றார் ரிஷப் பண்ட்.
இந்தியா 'ஏ' அணியைப் பொறுத்தவரை, துருவ் ஜூரலின் இரண்டு சதங்கள் மட்டுமே இந்த ஆட்டத்தின் ஒரே ஆறுதலாக அமைந்தது. ஆனால், பந்துவீச்சில் சரியான திட்டங்கள் இல்லாததால், வெற்றியைத் தக்கவைக்க முடியாமல் போனது. தென்னாப்பிரிக்க அணி ஒரு தனி வீரரின் திறமையை நம்பாமல், அணியின் கூட்டு முயற்சியால் 417 ரன் இலக்கை எட்டி இருக்கிறது.