ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணி தென்னாப்பிரிக்காவுக்கு சென்று நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.
இதில் இந்தியா ஏ அணியில் கே எஸ் பரத் தலைமையிலான அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஏ அணியில் ஜீன் டுபிளசிஸ் அதிகபட்சமாக 106 ரன்களை விளாசினார்.

அதன் பிறகு கான்னோர் 48 ரன்களும், ரூபின் ஹேர்மன் 95 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க ஏ அணி 319 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் பிரசித் கிருஷ்ணா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து இந்திய ஏ அணி தங்களுடைய பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தமிழக வீர சாய் சுதர்சன் 14 ரன்களிலும் தேவ்டட் படிக்கல் 30 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு பிரதோஷ் ரஞ்சன்பால் மற்றும் சப்ராஸ்கான் ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இதில் சப்ராஸ்கான் 85 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். எனினும் பிரதோஷ் ரஞ்சன் பால் அபாரமாக நின்று தென்னாப்பிரிக்க வீரர்களை சுளுக்கு எடுத்தார்.
இவருடைய விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். கடைசியாக 209 பந்துகளில் 163 ரன்கள் எடுத்த நிலையில் பிரதோஷ் ரஞ்சன்பால் பெவிலியன் திரும்பினார். இதில் 23 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். பிரதோஷ் ரஞ்சன் பாலின் ஆட்டத்தைக் கண்ட தென்னாப்பிரிக்கா வீரர்கள் அசந்து போனார்கள். வெறும் 22 வயது ஆன பிரதோஷ் ரஞ்சன் பால் தமிழக அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் டிஎன்பிஎல் போட்டிகளில் சேப்பாக், கோவை உள்ளிட்ட அணிகளுக்காகவும் விளையாடிருக்கிறார். பிரதோஷ் பால் ஒடிசாவில் பிறந்து வளர்ந்தாலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு குடியேறி தற்போது தமிழக அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முதல் வெளிநாட்டு தொடரிலே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து இருக்கும் பிரதோஷ் ரஞ்சன் பாலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள்.