U19 WC Final: எந்த வீரரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ரெக்கார்டை செய்த வைபவ் சூர்யவன்ஷி
ஹாராரே: ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் 175 ரன்கள் குவித்து வெறியாட்டம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு வீரரும் செய்யாத புதிய சாதனையையைப் படைத்துள்ளார்.
ஹாராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 6வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

உலக சாதனை நாயகன்
இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, இறுதிப்போட்டியிலும் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம், ஜூனியர் உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது ஆகிய இரண்டையும் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த வீரரும் ஒரே உலகக்கோப்பையில் இந்த இரண்டு முக்கிய விருதுகளையும் வென்றதில்லை.
அண்டர் 19 இறுதிப்போட்டி சதங்கள்
19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் அடிப்பது சாதாரண விஷயமல்ல. இதுவரை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே வீரர்கள் இந்தச் சாதனையைச் செய்துள்ளனர்.
வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) - 175 ரன்கள் (2026)
காலேப் ஃபால்கோனர் (இங்கிலாந்து) - 115 ரன்கள் (2026)
உன்முக்த் சந்த் (இந்தியா) - 111* ரன்கள் (2012)
பிரட் வில்லியம்ஸ் (ஆஸ்திரேலியா) - 108 ரன்கள் (1988)
ஸ்டீபன் பீட்டர்ஸ் (இங்கிலாந்து) - 107 ரன்கள் (1998)
மன்ஜோத் கல்ரா (இந்தியா) - 101* ரன்கள் (2018)
ஜாரட் பர்க் (ஆஸ்திரேலியா) - 100* ரன்கள் (2002)
முதலில் பேட்டிங் செய்து சாதனை
மேலே உள்ள பட்டியலைப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகும். உன்முக்த் சந்த், மன்ஜோத் கல்ரா போன்ற இந்திய வீரர்கள் இறுதிப்போட்டியில் சதம் அடித்திருந்தாலும், அவர்கள் இரண்டாவது பேட்டிங் செய்து (சேசிங்) இந்தச் சாதனையை நிகழ்த்தினார்கள்.
ஆனால், இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சதம் அடித்த ஒரே வீரர் வைபவ் சூர்யவன்ஷி மட்டுமே. அதுவும் 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்தது இறுதிப்போட்டி வரலாற்றில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
பாவம் ஃபால்கோனர்
இதே போட்டியில் இங்கிலாந்து வீரர் காலேப் ஃபால்கோனரும் 67 பந்துகளில் 115 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இறுதிப்போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் அவரும் இணைந்தார். ஆனால், ஒரு சோகமான சாதனையும் அவருக்குக் கிடைத்துள்ளது. அதாவது, ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் அடித்தும் தோல்வியைத் தழுவிய ஒரே வீரர் ஃபால்கோனர் தான். இதற்கு முன் சதம் அடித்த அனைத்து வீரர்களின் அணிகளும் கோப்பையை வென்றுள்ளன.
போட்டிச் சுருக்கம்
இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வைபவ் சூர்யவன்ஷியின் (175) அதிரடியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆயுஷ் மத்ரே 53 ரன்களும், அபிகியான் குண்டு 40 ரன்களும் எடுத்தனர்.
கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில், காலேப் ஃபால்கோனர் (115) மற்றும் பென் டாக்கின்ஸ் (66) ஆகியோர் போராடினர். இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர் அம்ப்ரிஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications