IND U19 vs SA U19: வைபவ் சூர்யவன்ஷி மிரட்டல் அடி.. மீண்டும் அதிரடி சதம்.. 74 பந்துகளில் 127 ரன்கள்
பெனோனி: தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்று வரும் யூத் ஒருநாள் தொடரில், இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் ஆடினார். வெறும் 14 வயதேயான அவர், 74 பந்துகளில் 127 ரன்களைக் குவித்து மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி யூத் ஒருநாள் போட்டி புதன்கிழமை (ஜனவரி 7) பெனோனியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவு எவ்வளவு தவறானது என்பதை வைபவ் சூர்யவன்ஷி தனது பேட்டிங் மூலம் உணர்த்தினார்.

தொடக்க வீரராகக் களமிறங்கிய வைபவ், முதல் பந்திலிருந்தே அதிரடியைக் காட்டினார். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 63 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். வைபவ் 74 பந்துகளை சந்தித்து மொத்தம் 127 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 170 என்பதாக இருந்தது.
மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் ஜார்ஜ் உடன் இணைந்து வைபவ் அமைத்த கூட்டணி, தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலையச் செய்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி வெறும் 25.4 ஓவர்களில் 227 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. வைபவ் ஆட்டமிழந்தபின், ஆரோன் ஜார்ஜ் சதம் அடித்தார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்தத் தொடர் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. முன்னதாக ஜனவரி 5-ம் தேதி நடந்த இரண்டாவது போட்டியிலும், இவர் டி20 பாணியில் புகுந்து விளையாடினார். அந்தப் போட்டியில் வெறும் 24 பந்துகளில் 10 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசி, இந்திய அணி தொடரைக் கைப்பற்ற முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
2026 ஐசிசி யு-19 உலகக் கோப்பைத் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசுர ஃபார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. 5 முறை சாம்பியனான இந்திய அணி, உலகக் கோப்பையில் குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணி, தனது முதல் போட்டியில் வரும் ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications