IND vs AFG: இந்திய அணி பிளேயிங் லெவனில் அறிமுகமாகும் 29 வயது வீரர்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். இதில் பிரின்ஸ் யாதவ் தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆவார் என்று அவர் கணித்துள்ளார். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, வரும் சனிக்கிழமை, ஜூன் 13 அன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் 15 பேர் கொண்ட இந்த வரிசையில் பிரின்ஸ் யாதவ், ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் ப்ரார் என மூன்று புதியவர்கள் இடம் பெற்றுள்ளனர். தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், ஹர்திக் பாண்டியா விளையாடாத பட்சத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக இஷான் கிஷனை மூன்றாவது வரிசையிலும், நிதிஷ் குமார் ரெட்டியை ஆறாவது வரிசையிலும் பேட்டிங் செய்ய அவர் தேர்வு செய்துள்ளார்.

"நான் உருவாக்கிய அணியில் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் பங்கேற்பு குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. எனவே அவர் அணியில் இல்லை என்று கருதுகிறேன். மூன்றாவது இடத்தில் இஷான் கிஷன், நான்காவதாக ஷ்ரேயாஸ் ஐயர், ஐந்தாவதாக கே.எல். ராகுல், ஆறாவது இடத்தில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஏழாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார்கள் என்று கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.
இந்திய அணி பிளேயிங் XI
மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பிரின்ஸ் யாதவை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். "எட்டாவது இடத்தில் குல்தீப் யாதவ், ஒன்பதிலிருந்து பதினோராவது இடம் வரை பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் இருப்பார்கள். இதுபோன்ற பிளேயிங் லெவன் அமைய வாய்ப்புள்ளது. இதில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு அதிக பொறுப்பு இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆகாஷ் சோப்ராவின் இந்திய ஆடும் லெவன்: ரோகித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.
இந்தியாவுக்கு அச்சுறுத்து தரும் வீரர்:
இதே வீடியோவில், சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக இல்லை என்று ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார். "2023 ஒருநாள் உலகக் கோப்பை முடிந்து, நமது வெற்றி சதவீதம் வெறும் 61 சதவீதமாக மட்டுமே உள்ளது. 23 போட்டிகளில் 14 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளோம், இது சிறப்பானதாக இல்லை. எனவே 2027 உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் சூழலில், இவை மாற வேண்டும்," என்றார்.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணி சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை அவர் சுட்டிக்காட்டினார். "2023 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் வெற்றி சதவீதம் 67 சதவீதமாக உள்ளது. முழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட நாடுகளில் இது இரண்டாவது சிறந்ததாகும். அவர்கள் விளையாடிய கடைசி ஆறு இருதரப்பு தொடர்களில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளனர், இதில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான வரலாற்று வெற்றியும் அடங்கும்," என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். "இந்தியா இதுவரை ஆப்கானிஸ்தானுடன் ஒருநாள் போட்டியில் தோற்றதில்லை என்பது உண்மைதான். நாம் மூன்றில் வெற்றி பெற்றுள்ளோம், ஒன்று சமனில் முடிந்தது. மிகப்பெரிய அச்சுறுத்தல் ரஷித் கானாகத்தான் இருப்பார்"
"ஏனென்றால் அவர் தனது பழைய பார்மிற்குத் திரும்பியுள்ளார். வலது கை பேட்டர்களுக்கு எதிராக அவர் சிறப்பாகப் பந்துவீசுவார், நமது அணியில் பெரும்பாலும் வலது கை பேட்டர்களே உள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.ரஷித் கான் 109 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 19.65 சராசரியுடன் 210 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் 27.20 சராசரியுடன் ஐந்து விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications

