IND vs AFG: இந்திய அணி வரலாற்று சாதனை.. இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் தோல்வி
சண்டிகர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. புதிய சண்டிகரின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் சாய் சுதர்சன் 81 ரன்கள் எடுத்து சதத்தைத் தவறவிட்டாலும், கேப்டன் சுப்மன் கில் மற்றும் அனுபவ வீரர் கேஎல் ராகுல் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். சுப்மன் கில் 103 ரன்களும், கேஎல் ராகுல் 100 ரன்களும் எடுத்தனர்.

இவர்களுக்குப் பின் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 564 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கித் திணறியது. அறிமுக வீரர் மானவ் சுதார் தனது முதல் போட்டியிலேயே மாயாஜாலம் நிகழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ரஹ்மத் ஷா மட்டும் ஓரளவு போராடி 50 ரன்களைக் கடந்தார். இருப்பினும், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டது. 414 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஃபாலோ-ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசையைச் சரித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மானவ் சுதார் அறிமுகப் போட்டியிலேயே மொத்தம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாச அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2018-ல் இதே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூருவில் பெற்ற இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வெற்றியே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
புதிய சண்டிகர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்தியா இத்தகைய பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இளம் வீரர் மானவ் சுதாரின் அறிமுக ஆட்டம் மற்றும் சுப்மன் கில்லின் கேப்டன்சி இந்த வெற்றியின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
