IND vs AFG: கோலி இடத்தில் கடவுளின் செல்லப் பிள்ளை ஆடட்டும்.. பிளேயிங் 11இல் ஜெய்ஸ்வால் வேண்டாம்
மொகாலி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், காயமடைந்த விராட் கோலிக்கு பதிலாக 3வது இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பில்லை என்றும், கடவுளின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஒரு வீரர் தான் களமிறங்க வேண்டும் என்றும் முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு மாற்று வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஆடும் லெவனில் இஷான் கிஷனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், "இஷான் கிஷன் தற்போது கடவுளின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார். எதிர்பாராத விதமாக கதவுகள் திறக்கும் போதெல்லாம், உள்ளே நுழைந்து ரன்களை குவித்து தனது இடத்தை அவர் தக்க வைத்துக் கொள்கிறார். 3வது இடத்தில் களமிறங்கினால் அவர் நிச்சயம் ரன் குவிப்பார். அவர் தற்போது அத்தகைய சிறந்த பார்மில் உள்ளார்" என்றார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிசிசிஐ ஒப்பந்தம் இன்றி, இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்த இஷான் கிஷனின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணியை கேப்டனாக வழிநடத்தி முதன்முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். அதன் பின்னர் டி20 உலகக் கோப்பை தொடரிலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் பார்மில் இல்லாததால், அக்டோபர் 2023க்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணிக்குள் இஷான் கிஷன் நுழைந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் 27 போட்டிகளில் விளையாடி 42.40 சராசரியுடன் 933 ரன்கள் எடுத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த 210 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அவர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டால், கடந்த போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் பெஞ்சில் அமர வேண்டியிருக்கும்.
ஆகாஷ் சோப்ராவின் இந்திய ஆடும் லெவன்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.


Click it and Unblock the Notifications

