IND vs AFG: இந்திய அணி பிளேயிங் XI.. 3வது ஒருநாள் போட்டியில் இவருக்கு ஓய்வு கொடுங்க- ஆகாஷ் சோப்ரா
சென்னை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி உடற்தகுதியுடன் இருந்தால், அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி, நாளை சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி பிளேயிங் XI
தனது யூடியூப் சேனலான 'ஆகாஷ் சோப்ரா'-வில் பகிர்ந்துள்ள வீடியோவில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும், நிதிஷ் காயத்தில் இருந்து குணமடைந்திருந்தால் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். "யஷஸ்வி ஒரே ஒரு போட்டியில் தான் விளையாடியுள்ளார். எனவே அவரை விளையாட விடுங்கள்.
கடினமான முடிவை எடுத்து, நிதிஷ் குமார் ரெட்டி உடற்தகுதியுடன் இருந்தால் அவரை விளையாட வைக்க விரும்புகிறோம் என்று கூறுங்கள். அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வளித்துவிட்டு நிதிஷ் குமார் ரெட்டியை விளையாட வையுங்கள். யஷஸ்விக்கு மீண்டும் எப்போது விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாததால், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டாம் என்று கூறுங்கள்" என சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியவுடன் ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பதை சோப்ரா சுட்டிக்காட்டினார். "கோலி திரும்பியவுடன், இஷானுக்கு இடம் இருக்காது. எனவே அண்மையில் சதம் அடித்து, முதல் போட்டியிலும் ரன்கள் குவித்த இஷான் கிஷானே வெளியே அமர வேண்டியிருக்கும் போது, யஷஸ்விக்கு வாய்ப்பே கிடைக்காது. அப்படியிருக்கும் போது, அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க நீங்கள் விரும்புவீர்கள்" என்று அவர் கூறினார்.
முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரரான சோப்ரா, தனது பினேயிங் லெவனில் குல்தீப் யாதவ், குர்னூர் பிரார் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகிய மூன்று சிறப்பு பந்துவீச்சாளர்களை மட்டுமே சேர்த்துள்ளார். "ரோஹித் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களம் இறங்கட்டும். ஷுப்மன் கில் 3-வது இடத்திலும், இஷான் 4-வது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 5-வது இடத்திலும், கே.எல். ராகுல் 6-வது இடத்திலும், நிதிஷ் குமார் ரெட்டி 7-வது இடத்திலும், வாஷிங்டன் சுந்தர் 8-வது இடத்திலும், குல்தீப் யாதவ் 9-வது இடத்திலும் களமிறங்கட்டும். இவர்களைத் தொடர்ந்து இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்களான குர்னூர் பிரார் மற்றும் பிரின்ஸ் யாதவ் விளையாடலாம். இதுவே எனது அணியாக இருக்கும்" என்று சோப்ரா கூறினார்.
"கூடுதல் பந்துவீச்சாளர் ஏன் தேவை?"
அதே வீடியோவில், இந்திய அணிக்கு ஆறாவது பந்துவீச்சு விருப்பம் தேவையில்லை என்றும், நிதிஷ் குமார் ரெட்டியை அவரது முழுமையான 10 ஓவர்களையும் வீசச் செய்ய வேண்டும் என்றும் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். "உங்களுக்கு ஏன் கூடுதல் பந்துவீச்சாளர் தேவை? இந்த ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே பந்து வீசச் செய்யுங்கள், நிதிஷ் குமார் ரெட்டியிடமிருந்து நமக்கு முழுமையாக 10 ஓவர்கள் தேவை.
நமது டாப் 6 பேட்ஸ்மேன்களில் யாரும் பந்துவீச மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும், யஷஸ்வி சிறிது வீசக்கூடும், ஆனால் நாம் இதைத்தான் செய்ய விரும்புகிறோம். நாம் கூடுதல் பந்துவீச்சாளருடன் செல்ல விரும்பவில்லை. நமக்கு ஐந்து முழு பந்துவீச்சாளர்கள் தேவையில்லை. நாம் நான்கரை பந்துவீச்சாளர்களுடன் கூட விளையாடத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் சவாலை அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், சனிக்கிழமை நடக்கும் போட்டியில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுமாறு அஷ்மத்துல்லா ஷாஹிதிக்கு அறிவுறுத்தினார். "ஆப்கானிஸ்தான் இந்திய அணியின் வலிமைக்கு இணையாகத் தெரியவில்லை. அவர்கள் முயற்சிக்கிறார்கள், ஆனால் அது சரியாக அமையவில்லை. ஆப்கானிஸ்தான் அணி, மீண்டும் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுங்கள், ஏனென்றால் நீங்கள் முதலில் பந்துவீசினால் மீண்டும் பலத்த அடி வாங்குவீர்கள்" என்று சோப்ரா கூறினார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடுமையான வெப்பநிலை நிலவிய போதிலும் அஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பந்துவீசத் தேர்ந்தெடுத்தார். இதனால் இந்தியா 402 ரன்கள் குவித்து, இறுதியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

